ரிஷப் பண்ட் ‘ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்-ன் போராட்டத்தால் இந்திய அணி மீண்டுள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை சேர்த்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 13 ரன்கள் முன்னிலை பெற்றது.

2வது இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோருக்குள்ளேயே தனது டாப் ஆர்டர் விக்கெட்களை இழந்தது. ஓப்பனிங் வீரர்கள் கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கும் மயங்க் அகர்வால் 7 ரன்களுக்கும் நடையை கட்டினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய புஜாரா 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஒன் மேன் ஷோ காட்டிய பண்ட்
இதனால் ஒட்டுமொத்த பொறுப்புகளும் மீண்டும் விராட் கோலியின் மீது விழுந்தது. ஆனால் அதனை தனது தோள்களில் சுமந்துள்ளார் ரிஷப் பண்ட். சீனியர் வீரர்கள் அனைவரும் சொதப்பிய போது, ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தால் வேகமாக ரன்களை உயர்த்தினார். அவரின் ஷாட்களை பார்த்து வியந்த விராட் கோலி தனது ஆட்டத்தை நிதானாமாக வைத்துக்கொண்டு பண்ட்-க்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப் மட்டும் 94 ரன்கள் சேர்ந்தது. விராட் கோலி 29 ரன்களுக்கு வெளியேறினார்.

பண்ட் அதிரடி சதம்
ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதும், ரிஷப் பண்ட் தனது அதிரடியில் கொஞ்சம் கூட குறைக்கவில்லை. டெயில் எண்டர்களிடம் மிகவும் சாதூர்யமாக பார்ட்னர்ஷிப்களை பெற்று அதிரடி சதத்தை பூர்த்தி செய்தார். மொத்தம் 139 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் சதமடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வெற்றி வாய்ப்பு என்ன
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே தென்னாப்பிரிக்க அணி 200+ இலக்கை துரத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு தான் 200+ இலக்கை துரத்தியது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications