அகமதாபாத்: "டாஸ் ஜெயிச்சு பவுலிங் எடுத்தது ஒரு குத்தமாடா? இப்படியா போட்டு அடிக்கிறது?" என்று தென்னாப்பிரிக்க பவுலர்கள் கதறும் அளவுக்கு, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டனர். தொடக்க வீரர்கள் முதல் ஃபினிஷர் வரை அனைவரும் மாறி மாறி வெளுத்து வாங்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்து மிரட்டியுள்ளது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. கில்லுக்கு பதிலாக அணியிலல் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியை கையில் எடுத்தது. பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்க, பவர் பிளே ஓவர்கள் ரன் மழையாக பொழிந்தது.

அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்தார்.
சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.4 ஓவரில் 63 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், 3வது வீரராக களமிறங்கிய திலக் வர்மா பொறுப்புடன் ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து நின்ற அவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பவுண்டரிகளை விரட்டினார். 42 பந்துகளை சந்தித்த திலக் வர்மா 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 73 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார்.
12.1 ஓவரில் இந்தியா 115 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்த போது களத்திற்குள் வந்தார் ஹர்திக் பாண்டியா. அதன் பிறகு மைதானத்தில் நடந்ததெல்லாம் சரித்திரம். தென்னாப்பிரிக்காவின் முன்னணி பவுலரான மார்கோ யான்சன் முதல் சுழற்பந்து வீச்சாளர் லிண்டே வரை யாரையும் பாண்டியா விட்டுவைக்கவில்லை.
வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 25 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் விளாசினார். ஸ்ட்ரைக் ரேட் 252.00! திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி 4வது விக்கெட்டுக்கு வெறும் 44 பந்துகளில் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனைவரும் வாரி வழங்கினர். குறிப்பாக மார்கோ யான்சன் 4 ஓவரில் 50 ரன்களை கொடுத்து மோசமான சாதனை படைத்தார். கார்பின் போஷ் 3 ஓவரில் 44 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 4 ஓவரில் 46 ரன்களையும் வழங்கினர். இறுதியில் இந்தியா 227 ரன்கள் குவிக்க, இந்த இமாலய இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.