சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்து இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததற்கு தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை மட்டுமே குறை கூறுவது நியாயமல்ல என்று மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், வீரர்கள் தங்கள் பொறுப்பை உணராத வரை பயிற்சியாளரை மட்டும் மாற்றிப் பயனில்லை என்றும் அவர் காட்டமாகத் விமர்சனம் செய்துள்ளார்.
கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. கடந்த 13 மாதங்களில் சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் இரண்டாவது ஒயிட்வாஷ் இதுவாகும். இதனால் கவுஹாத்தி மைதானத்திலேயே ரசிகர்கள் "கம்பீர் ஹாய் ஹாய்" (கம்பீர் ஒழிக) என்று அசாம் மொழியில் கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

ரசிகர்களின் இந்தத் தாக்குதல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "எல்லோரும் பயிற்சியாளரைக் கேள்வி கேட்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் இது சுலபம். ஆனால் ஒரு பயிற்சியாளரால் பேட்டை பிடித்துக்கொண்டு மைதானத்திற்குள் சென்று விளையாட முடியாது. அவரால் வீரர்களிடம் பேச முடியும், அவ்வளவுதான்.
ஒரு கோச் என்ன செய்ய முடியும்? நீங்களே அந்த இடத்தில் இருந்து பாருங்கள். அணியில் நிறைய மாற்றங்கள் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், களத்தில் நின்று திறமையை வெளிப்படுத்த வேண்டியது ஒரு வீரரின் கடமை. முடிவெடுப்பது கோச் மற்றும் கேப்டன் கையில் இருந்தாலும், ஆடுவது வீரர்கள் தான்" என்று அஸ்வின் கூறினார்.
வீரர்களின் பொறுப்பின்மை குறித்துப் பேசும்போது, "தமிழில் சொல்வார்கள்.. கையில் மாவு இருந்தால்தான் சப்பாத்தியோ, ரொட்டியோ சுட முடியும். மாவே இல்லை என்றால் எப்படி சப்பாத்தி வரும்? வீரர்கள் தங்கள் பொறுப்பை முழுமையாக உணர்ந்து ஆடியதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் பயிற்சியாளரின் முடிவுகளை மட்டும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. நிச்சயமாக முடிவுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒருவரை மட்டும் தாக்குவதை நான் விரும்பவில்லை" என்றார் அஸ்வின்.
மேலும் கம்பீரை ஆதரிப்பது குறித்துப் பேசிய அவர், "இப்படிப் பேசுவதால் நான் அவருக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். கவுதம் கம்பீர் ஒன்றும் எனக்குச் சொந்தக்காரர் கிடையாது. அவர் செய்த 10 தவறுகளை என்னாலும் சுட்டிக்காட்ட முடியும். தவறுகள் நடப்பது இயல்பு. ஆனால் தோல்வி என்று வரும்போது அது பெரிதாகத் தெரிகிறது.
ஒரு அணியை நிர்வகிப்பது அவ்வளவு எளிதல்ல. அவரும் தோல்வியால் வருத்தத்தில் இருப்பார். ஒருவரைப் பதவியை விட்டுத் தூக்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு" என்று அஸ்வின் கூறினார்.
அஸ்வின் ஆதரவு தெரிவித்தாலும், கம்பீரின் செயல்பாடுகள் கவலையளிப்பதாகவே உள்ளன. அவரது பயிற்சியின் கீழ் இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 10-ல் தோல்வியைத் தழுவியுள்ளது. வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. குறிப்பாக நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் வாங்கிய 'ஒயிட்வாஷ்' அடிகள், அவரது பதவிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.