கேபெர்ஹா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆனது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் என இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், திலக் வர்மா மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து ரன் சேர்த்தனர்.

திலக் வர்மா 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து ஆடினர். ஹர்திக் பாண்டியா மிகவும் நிதானமாக ரன் சேர்த்த நிலையில், அக்சர் பட்டேல் நான்கு பவுண்டரி அடித்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்தார். அவர் 21 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமான முறையில் ரன் அவுட் ஆனார்.
தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் பீட்டர் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா நேராக அடித்தார். அப்போது அக்சர் பட்டேல் ரன் ஓடுவதற்காக கிரீசை விட்டு சில அடி தூரம் முன்னே எடுத்து வைத்தார். அப்போது நேராக வந்த பந்தை பீட்டர் பிடிக்க முயன்றார். அவரது கைகளில் பட்ட பந்து நேராக எதிர்முனை ஸ்டம்பை பதம் பார்த்தது.
அப்போது அக்சர் பட்டேல் கிரீசை விட்டு சில அடி தூரம் முன்னே இருந்ததால் ரன் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க வீரர் ரன் அவுட் செய்ய வேண்டும் என்று கூட முயற்சி செய்யவில்லை. துரதிர்ஷ்டவசமான முறையில் அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் ஹர்திக் பாண்டியா ரன் குவிக்க திணறினார்; அதிக பந்துகளை வீணடித்தார்.
இதுவே இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. ஒருவேளை அக்சர் பட்டேல் இறுதி வரை நின்று ஆடி இருந்தால் அதிரடியாக ரன் சேர்த்து இருக்க வாய்ப்பு இருந்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.