பிரிட்ஜ்டவுன்: இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் சிவம் துபேவை பார்த்து இந்திய ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர். 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் சிவம் துபே டக் அவுட் ஆனால் கூட பிரச்சனை இல்லை, ஆனால் அவர் பந்துகளை வீணடித்தால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர் என்ற ஒரே காரணத்தால் சிவம் துபே இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டார். இடது கை பேட்ஸ்மேனான அவர் பெரிய சிக்ஸர்கள் அடிப்பதை பார்த்து அடுத்த யுவராஜ் சிங் என்றும் முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி இருந்தனர்.

அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஓவர்களில் அபாரமாக ஆடி வந்தார். ஆனால், 2024 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியிலேயே அவர் ஃபார்ம் அவுட் ஆனார். எனினும், அவரை நம்பி இந்திய அணியில் சேர்த்த கேப்டன் ரோஹித் சர்மா பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு அளித்தார்.
முதல் சில போட்டிகளில் மோசமாக ஆடிய அவர் கடைசி இரண்டு போட்டிகளில் ஓரளவு ரன் சேர்த்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மோசமாக இல்லை. எனினும், அவர் ஒவ்வொரு போட்டிகளிலும் நிறைய டாட் பால்கள் ஆடுகிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் ஐந்து போட்டிகளில் அவர் அதிக பந்துகளை வீணடித்து இருக்கிறார். அந்த போட்டிகளில் இந்தியா வென்றதால் அவர் தப்பினார்.
இந்த நிலையில், அடுத்த யுவராஜ் சிங் என அழைக்கப்படும் சிவம் துபே 2014ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் ஆடியதைப் போன்ற ஒரு இன்னிங்க்ஸ் ஆடி விடக் கூடாது என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது. 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடியது.
அப்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா 29 ரன்களும், விராட் கோலி 58 பந்துகளில் 77 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்து இருந்தனர். நான்காம் வரிசையில் இறங்கிய யுவராஜ் சிங் கடைசி ஐந்து ஓவர்களில் மிக மோசமாக பேட்டிங் ஆடினார். 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதனால், அந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த இலங்கை அணி 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி கோப்பை வென்றது.
இந்த போட்டியில் யுவராஜ் சிங் ஆடியதை போலத் தான் சிவம் துபே பல போட்டிகளில் பந்துகளை வீணடித்து இருக்கிறார் என ரசிகர்கள் சூட்டில் காட்டுகின்றனர். யுவராஜ் சிங் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன சிவம் துபே எக்காரணத்தைக் கொண்டும் இந்த இறுதிப் போட்டியில் பந்துகளை வீணடிக்க கூடாது. அதற்கு பதிலாக தான் சந்திக்கும் முதல் பந்திலேயே கூட அவர் டக் அவுட் ஆகி செல்லலாம். ஏனெனில், அவர் ஆட்டமிழந்தால் கூட அடுத்து ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் போன்ற ஆல் ரவுண்டர்கள் உள்ளனர் என சுட்டிக்காட்டுகின்றனர். சிவன் துபே இந்திய அணியை காப்பாற்றுவாரா? அல்லது வீழ்த்துவாரா?