மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் பல வீரர்கள் புதிய வாழ்க்கையை பெற்றிருக்கிறார்கள். சிலர் சாதாரண வீரராக வந்து பிற்காலத்தில் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக உயர்ந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் டிஎன்பிஎல், ஐபிஎல், போன்ற தொடர்களில் விளையாடி தற்போது இந்திய அணியின் கதவை தட்டி தொடர்ந்து இரண்டு அரை சதம் அடித்திருப்பவர் தான் தமிழக வீரர் சாய் சுதர்சன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி கடினமான சூழலில் அரை சதம் கடந்தார்.

இதனால் சாய் சுதர்சனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளத்தில் ஒருவர் தொடர்ந்து இரண்டு அரை சதம் அடிக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு அதிக திறமை இருக்கிறது.
அடுத்த 10, 15 ஆண்டுகள் இந்திய அணியில் சாய் சுதர்சனின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் என்றுதான் நான் கருதுகிறேன். சாய் சுதர்சன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறார். ஆனால் அவர் தொடங்கிய விதம் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவருடைய பேட்டில் இருந்து முதல் பவுண்டரி சென்ற போது எனக்கு தெரிந்தது. இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கிவிட்டார் என்று!

சாய் சுதர்சன் பேட்டிங்கை நீங்கள் கவனித்தால் தெரியும் ,ஷார்ட் பாலை அவர் எப்படி எதிர்கொள்கிறார். கால்களை எப்படி நகர்த்தி விளையாடுகிறார். வேகப்பந்துவீச்சை எப்படி விளையாடுகிறார். சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பார்த்தால் உங்களுக்கு புரியும். இதேபோன்று சாய் சுதர்சன் ஸ்விப் ஷாட்டையும் நன்றாக விளையாடுகிறார்.
பந்தின் வேகம் குறைவாக இருந்தால், இறங்கி வந்து தூக்கி அடிக்கிறார். மேலும் அவருடைய பேட்டிங் பார்க்கும்போது முதிர்ச்சி தெரிகிறது. அவருடைய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பார்த்தால் அவருடைய சராசரி 60க்கு மேல் இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறந்த விளையாடி இருக்கிறார். கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி அங்கேயும் தன்னுடைய திறமையை இளம் வயதிலேயே நிரூபித்து இருக்கிறார். இளம் வயதிலேயே பல்வேறு நாடுகளில் சென்று விளையாடி அந்த வாய்ப்பை நன்றாகவும் பயன்படுத்திருக்கிறார் என்று இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.