மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடருக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அதிலும் இந்திய அணியை ஆசிய போட்டிகள் தொடரில் வழிநடத்தியதோடு, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அந்த அளவிற்கு ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இந்திய அணியில் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட்-ம் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்து வருகிறார். அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் மட்டும் 223 ரன்களை விளாசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதன் மூலமாக 3 வடிவங்களுக்குமான கிரிக்கெட்டிலும் ருதுராஜ் கெய்க்வாட் அசத்துவார் என்று பார்க்கப்படுகிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்தாலும், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் அறிமுகமாகவில்லை.
ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கும் பட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அவரது இடத்தில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ரஹானே, புஜாரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே பல்வேறு தருணங்களில் தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் தொடக்கம் கொடுக்கும் ருதுராஜ் கெய்க்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்கம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.