சென்னை : டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்க்ஸில் முச்சதம் (300 ரன்கள்) அடித்த இந்திய வீரர்கள் இருவர் மட்டுமே. ஒருவர் வீரேந்தர் சேவாக். மற்றொருவர், கருண் நாயர்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து கிரிக்கெட் உலகை தன்னை நோக்கி பார்க்க வைத்தார். ஆனால், அப்படி ஒரு சாதனை செய்தும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கவில்லை பிசிசிஐ.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008இல் சேவாக் முச்சதம் அடித்துள்ளார். அதற்கு பின் எட்டு ஆண்டுகள் கழித்து கருண் நாயர் முச்சதம் அடித்தார். அதன் மூலம் கருண் நாயர் சேப்பாக்கம் மைதானத்திற்கு பெருமை தேடித் தந்த வீரராகவும் இருக்கிறார்.

2016இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் மூன்று இன்னிங்ஸ்களில் களமிறங்கி 4, 13, 303* என ரன்களை எடுத்து இருந்தார். அதன் பின் 2017இல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். இதில் நான்கு இன்னிங்க்ஸ்களில் களமிறங்கி 26, 0, 23 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
கருண் நாயர் ஃபார்மில் இல்லை எனக் கூறி அவரை அணியில் இருந்தே நீக்கியது பிசிசிஐ தேர்வுக் குழு. அப்போது விராட் கோலி தான் கேப்டன். அந்த சமயம் இந்திய அணியில் ஒவ்வொரு தொடருக்கும், ஒவ்வொரு போட்டிக்கும் இடையே கூட வீரர்களை மாற்றிக் கொண்டே இருக்கும் போக்கு இருந்தது. அதில் சிக்கி தன் வாய்ப்பை இழந்தார் கருண் நாயர்.
தற்போது 32 வயதாகும் நிலையில் கருண் நாயருக்கு இன்னும் கூட இந்திய அணியில் களமிறங்க உடற்தகுதி உள்ளது. ஆனாலும், அவரை தேர்வுக் குழு கண்டு கொள்ளவே இல்லை என்பது தான் சோகம். வெறும் 7 இன்னிங்க்ஸில் ஒரு வீரரின் திறமையை கண்டுபிடித்து விட முடியுமா? அந்த 7 இன்னிங்க்ஸில் ஒரு முச்சதம் அடித்து இருக்கிறார் என்றால் அவருக்கு கூடுதலாக ஒரு 7 - 8 டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு கொடுக்கலாமே. ஆனால், இதை செய்ய பிசிசிஐ தயாராக இல்லை.