மும்பை : இந்திய டி20 அணியில் ஏற்கனவே ரோஹித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக இடம் பெறாத நிலையில், மற்றொரு அனுபவ வீரரையும் பிசிசிஐ ஒதுக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் கே எல் ராகுல் சுமாரான பேட்டிங்கை ஆடி இருந்தார். 6 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 120 ஆக இருந்தது. டி20 போட்டியில் இப்படி மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடியதால் அதிருப்தியில் இருந்த பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு அவரை டி20 அணியில் சேர்க்க வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனும் நிலையில், மற்ற இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா போன்றோர் கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடியதை மனதில் வைத்தே தேர்வுக் குழு இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
அதன் காரணமாகவே இஷான் கிஷனுக்கு சமீபத்தில் டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஜிதேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் கே எல் ராகுல் இடம் பெற மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
டி20 உலகக்கோப்பை அணியில் இஷான் கிஷன் முதன்மை விக்கெட் கீப்பராகவும், ஜிதேஷ் சர்மா மாற்று விக்கெட் கீப்பராகவும் இடம் பெறவே அதிக வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அவர்கள் இவருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம், கே எல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதனால், அவரை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தேர்வு செய்யவும் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
டெஸ்ட் அணியிலும் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும். எனினும், அவர் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் பெரிய அளவில் தன்னை நிரூபிக்கவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணிக்கு திரும்பினால் அந்த இடமும் ராகுலுக்கு சிக்கலாக மாறலாம்.