சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக விளையாடி வருவதைக் கண்டு, முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாகக் கொந்தளித்துள்ளார். இந்திய அணியின் தேர்வு முறை, பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் அணுகுமுறை மற்றும் வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் என அனைத்தையும் அவர் தனது யூடியூப் சேனலில் விளாசியுள்ளார்.
கவுகாத்தி டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குச் சுருண்டது. இது குறித்து தனது மகன் அனிருத் உடன் தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

முதலில் அணியின் தேர்வு முறை குறித்துப் பேசிய அவர், "அணித் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. அக்சர் படேல் ஏன் விளையாடவில்லை? அவர் உடற்தகுதி இல்லாமலா இருக்கிறார்? எல்லா விதமான கிரிக்கெட்டிலும் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் அவரை ஏன் ஓரங்கட்டுகிறீர்கள்? ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் அறிமுகமாகிறார்கள். இதற்குப் பெயர் 'சோதனை முயற்சி' என்று அவர்கள் சொல்லலாம்.
கவுதம் கம்பீர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நான் ஒரு முன்னாள் கேப்டனாகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் இருந்தவன். நான் சும்மா பேசவில்லை. அணிக்குத் தேவை 'நிலைத்தன்மை'. இங்கிலாந்தில் சிறப்பாக ஆடியபோது நான் பாராட்டினேன். ஆனால் இப்போது நடப்பது என்ன?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரீகாந்த்.
இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டியை ஆல்-ரவுண்டர் என்று சொல்வதைக் கேட்டு ஸ்ரீகாந்த் செம டென்ஷன் ஆகிவிட்டார். "யார் சொல்வது நிதிஷ் ரெட்டி ஒரு ஆல்-ரவுண்டர் என்று? அவர் பந்துவீசுவதைப் பார்த்தால் உங்களுக்கு ஆல்-ரவுண்டர் போலத் தெரிகிறதா? அவர் மெல்போர்னில் ஒரு சதம் அடித்தார், ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்தார்?
நிதிஷ் ரெட்டி ஒரு ஆல்-ரவுண்டர் என்றால், நான் ஒரு மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர். சும்மா சொல்லக்கூடாது. அவரிடம் வேகமும் இல்லை, ஸ்விங்கும் இல்லை. அவர் ஒன்றும் பயங்கரமான பேட்ஸ்மேனும் கிடையாது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இவரை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏன் அக்சர் படேலை எடுக்கவில்லை?" என்று ஸ்ரீகாந்த் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், "நேற்று குல்தீப் யாதவ் இந்த பிட்ச் ஒரு 'ரோடு' மாதிரி இருக்கிறது, பந்து திரும்பவில்லை என்று கூறினார். ஆனால் இன்று பார்த்தால் இந்திய வீரர்கள் சைமன் ஹார்மர் மற்றும் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்கள். ரோடில் எப்படி பந்து திரும்பும்?
அதுமட்டுமில்லாமல், இந்த பிட்சில் ஒன்றுமே இல்லை என்றார்கள். ஆனால் மார்கோ ஜான்சன் பவுன்சராக வீசி 5 விக்கெட்டுகளை எடுக்கிறாரே? சைமன் ஹார்மர் பந்தைத் தூக்கி வீசுகிறார், ஆனால் நம் ஊர் ஸ்பின்னர்கள் தட்டையாக வீசுகிறார்கள்" என்று பந்துவீச்சாளர்களைச் சாடினார்.
ரிஷப் பண்ட் அவுட் ஆன விதத்தையும் ஸ்ரீகாந்த் விட்டுவைக்கவில்லை. "ரிஷப் பண்ட் இறங்கி வந்து கண்ணை மூடிக்கொண்டு சுத்துகிறார். இதுதான் அவருடைய இயல்பான ஆட்டம் என்று சொல்வார்கள். ஆனால் அவர் ஒரு கேப்டன். போட்டியின் சூழலைப் புரிந்து கொண்டு ஆட வேண்டாமா?" என்று விமர்சித்தார்.
அதேபோல துருவ் ஜூரலை விமர்சித்த அவர், "துருவ் ஜூரல் ஒன்றும் பெரிய பேட்ஸ்மேன் கிடையாது. வெஸ்ட் இண்டீஸில் நன்றாக ஆடினார் என்பதற்காகத் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். 8-வது இடம் வரை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்று பெருமை பேசுகிறார்கள். ஆனால் 8 பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகிறோம். ஒரு பேட்ஸ்மேன் குறையும்போது 189-க்கு அவுட் ஆகிறோம். வெறும் 12 ரன்கள் தான் வித்தியாசம்" என்று கிண்டலாகக் கூறினார் ஸ்ரீகாந்த்.
கடைசியாகத் தென்னாப்பிரிக்க வீரர்களைப் பாராட்டிய ஸ்ரீகாந்த், "மார்கோ ஜான்சன் இந்தியப் பந்துவீச்சை எப்படி அடித்து நொறுக்கினார் பார்த்தீர்களா? பும்ராவை எல்லாம் சர்வசாதாரணமாக அடித்தார். இதோ பிரம்மபுத்திரா நதி, அதோ அசாம் தேயிலைத் தோட்டம் என்று மைதானத்தின் நாலாபுறமும் அடித்தார். நல்லவேளை டாக்கா வரை அடிக்கவில்லை. அவருக்கு யாரும் ஷார்ட் பால் போடவில்லை. நம் ஆட்கள் அவருக்குத் தோதாகவே பந்து வீசினார்கள். செனுரன் முத்துசாமி மற்றும் ஜான்சன் மிகச்சிறப்பாக ஆடினார்கள். இது இந்திய அணிக்கு ஒரு வெட்கக்கேடான செயல்பாடு" என்று கூறினார் ஸ்ரீகாந்த்.