மும்பை : இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு சமீபத்தில் திவ்யா சிங் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு இடையே ஒரு போட்டிக்கு மட்டும் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டார்.
அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு முன்னதாக தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உள்ளூர் செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க வந்தனர். திருமண வாழ்க்கை துவங்க உள்ளது குறித்து அவரது கருத்தை கேட்டனர்.

அதற்கு பதில் அளிக்கும் போது முகேஷ் குமார் இரட்டை அர்த்தத்தில் பேசி மனைவியை வெட்கத்தில் திளைக்க வைத்தார். அவர் அளித்த அந்த பதில் - "மிகவும் நன்றாக உள்ளது. துவக்கத்தில் இருந்தே என்னுடன் இருக்கும் ஒருவருடன் நான் இந்த புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன். அடுத்த போட்டியை அவருடைய அனுமதியுடன் விளையாட ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
அடுத்த போட்டி என அவர் குறிப்பிட்டது இரட்டை அர்த்தத்தில் அமைந்ததால் அவரது மனைவி திவ்யா சிங், முன்னே நிறைய கேமரா இருந்ததால் வெட்கத்தில் தலையை குனிந்து கொண்டார். செய்தியாளர்கள் கூட சிரித்து விட்டனர். அடுத்து முகேஷ் குமார் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார். அதை தான் மனைவியின் அனுமதியுடன் ஆடப் போகிறேன் என அப்படி சொன்னாரா? அல்லது வேறு அர்த்தத்தில் சொன்னாரா? என தெரியவில்லை.
முகேஷ் குமார் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருகிறார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அடுத்து தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என மூன்று அணிகளிலும் இடம் பெற்ற சில வீரர்களில் இவரும் ஒருவர். மூன்று வித அணிகளிலும் முகேஷ் குமார் 11 வீரர்களில் ஒருவராக போட்டிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெஸ்ட் அணியின் காயத்தில் இருக்கும் முகமது ஷமியின் இடத்தை முகேஷ் குமார் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.