ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, காயத்தால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே டி20 அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கும் இந்தச் சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுடன் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிவேகப் பந்துவீச்சாளரான அன்ரிச் நார்ட்ஜே, கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தொடர் காயங்களால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடைசியாக 2024-ம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு அணியில் இடம்பெறாத அவர், தற்போது டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு பெரும் பின்னடைவாக, அதன் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். விலா எலும்பில் ஏற்பட்டுள்ள காயத்தின் காரணமாக அவர் தற்போது நடைபெறும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நமீபியாவுக்கு எதிரான போட்டி மற்றும் சமீபத்திய பாகிஸ்தான் தொடரைத் தவறவிட்ட எய்டன் மார்க்ரம், மீண்டும் டி20 அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்கிறார். ஒருநாள் அணிக்கு டெம்பா பவுமா தலைமை தாங்குகிறார். சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான ரூபின் ஹெர்மன் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், "அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இந்தத் தொடர் மிகச் சிறந்த வாய்ப்பாகும். அன்ரிச் நார்ட்ஜே மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் அணிக்கு என்ன கொண்டு வருவார் என்பது நமக்குத் தெரியும்" என்று கூறினார். அதேபோல், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் அணியைச் கட்டமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஸி, டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்.
டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நந்த்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஸி, ரூபின் ஹெர்மன், கேசவ் மகாராஜ், மார்கோ யான்சன், எய்டன் மார்க்ரம், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கல்டன், பிரீனலன் சுப்ராயன்.
நவம்பர் 30 - ராஞ்சி
டிசம்பர் 03 - ராய்ப்பூர்
டிசம்பர் 06 - விசாகப்பட்டினம்
டிசம்பர் 09 - கட்டாக்
டிசம்பர் 11 - சண்டிகர்
டிசம்பர் 14 - தரம்சாலா
டிசம்பர் 17 - லக்னோ
டிசம்பர் 19 - அகமதாபாத்