கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் வித்தியாசமான பேட்டிங் திட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் அடைந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு சுருண்ட நிலையில் ரோஹித் சர்மா துவக்கத்தில் ஆடிய அதிரடி ஆட்டம் காரணமாகவே இந்தியா ஓரளவு ரன் குவித்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றி பெற முடிவு செய்து களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை 55 ரன்களில் ஆல் - அவுட் செய்து அதிரடி காட்டியது இந்திய அணி. அடுத்து இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆட வந்தது. பிட்ச்சின் தன்மை பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் தான் இந்திய அணி சிறப்பாக பந்து வீசி இருந்தது.
அதே போல நாமும் இந்திய அணியை குறைந்த ரன்களில் வீழ்த்தலாம் என வெறி கொண்டு பந்து வீச வந்தது தென்னாப்பிரிக்கா அணி. முதல் டெஸ்ட்டில் இந்திய பேட்டிங் வரிசையை வீழ்த்தி அனுப்பிய ரபாடா விக்கெட் வேட்டையாடலாம் என நம்பிக்கையுடன் வந்தார். அவர் திட்டப்படி மூன்றாவது ஓவரில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.
ஆனால், மற்றொரு துவக்க வீரரானா கேப்டன் ரோஹித் சர்மா வேறொரு பேட்டிங் திட்டத்தை செயல்படுத்தினார். அதாவது தென்னாப்பிரிக்க அணியை விட இந்திய அணி முன்னிலை பெற்று விட்டால் தென்னாப்பிரிக்க அணி நம்பிக்கை இழந்து விடும். அவர்களின் ஸ்கோரான 55 ரன்களுக்குள் அதிக விக்கெட்கள் விழுந்து விட்டால், தென்னாப்பிரிக்கா தன்னம்பிக்கை பெற்று விடும். அதை செய்ய விடக் கூடாது என முடிவு செய்த ரோஹித், ஒருநாள் போட்டிகள் போல முதல் பத்து ஓவர்களை பவர்பிளே போல ஆட திட்டமிட்டு ஆடினார்.
அதே சமயம், இந்திய அணிக்கு ஆபத்தான வீரரான ரபாடா ஓவர்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார். ரபாடா ஓவர்களில் எல்லாம் பவுண்டரி அடிக்காமல் தடுப்பாட்டம் ஆடிய ரோஹித், மற்ற பந்துவீச்சாளர்களான என்கிடி மற்றும் பர்கர் ஓவர்களில் பவுண்டரியாக அடித்தார்.
இதை அடுத்து இந்திய அணி முதல் பத்து ஓவர்களில் எல்லாம் 1 வெஸ்ட்இண்டீஸ் விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை எடுத்தது. டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 6 ரன்கள் என்ற கணக்கில் ரன் குவித்து தெறிக்க விட்டார் ரோஹித் சர்மா. தென்னாப்பிரிக்க அணியை விட இந்தியா 10 ஓவர்களில் எல்லாம் முன்னிலை பெற்றதால் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் வெறுப்படைந்தனர். அது அவர்களின் பந்துவீச்சில் தெரியத் துவங்கியது.
ரபாடா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசாமல், பந்துகள் சரியான லைன், லென்த் இல்லாமல் வீசப்பட்டன. ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் இந்திய அணி முன்னிலை பெற வைத்தார். அதே சமயம் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை விமர்சனமும் செய்தனர் ஒரு சார்பு ரசிகர்கள்.