ஜோகனஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டி இன்று இரவு 8:30 மணிக்கு ஜோனஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில் இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தென்னாப்பிரிக்காவுக்கு வந்து விட்டார்கள். ஆனால் இந்திய அணியும் ஸ்டார் வீரராக கருதப்பட்ட கில் தாம் விடுமுறையில் இருப்பதால் தென்னாப்பிரிக்க தொடருக்கு உடனே வர முடியாது என்று பிசிசிஐயிடம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை கில் வெளிப்படுத்தி வருகிறார். அடுத்த கோலி இவர் தான் என்று ரசிகர்கள் போற்றும் நிலையில் தலைகனம் ஏறி விட்டதாக பல விமர்சகர்கள் கில்லை கடுமையாக சாடி இருந்தார்கள். இந்த நிலையில் கில்லின் இந்த கோரிக்கையை ஏற்காத பிசிசிஐ உடனே இந்திய அணியில் வந்து சேருமாறு கூறியிருந்தது.
முதல் டி20 போட்டி மழையால் இரத்தான நிலையில் இரண்டாவது t20 போட்டியில் களமிறங்கிய கில் டக்அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகவும் விளங்கினார். டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்து வரும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கில் இவ்வாறு மெத்தனமாக இருப்பது அவருடைய இடத்துக்கே தற்போது ஆபத்தை ஏற்படுத்தி விட்டது.
தொடக்க வீரராக யாரைத் தேர்வு செய்யலாம் என்ற விவாதம் தற்போது மேலோங்கி வருகிறது. குறிப்பாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நட்சத்திர வீரர் ருதுராஜ் தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார். மேலும் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
இந்த நிலையில் கில் வந்ததால் தன்னுடைய இடத்தை ருதுராஜ் இழந்ததாக கருதப்பட்டது. ஆனால் இந்திய அணி நிர்வாகமும் ருதுராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தது. தற்போது மூன்றாவது டி20 போட்டியில் ருதுராஜ் அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டால் கில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படலாம் என்றும் பி சி சி ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.