டர்பன் : வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஒரே கேள்வியாக இருக்கிறது.
ரோகித் சர்மா டி20 போட்டியில் விளையாட மாட்டேன் என்று விலகி விட்ட நிலையில் விராட் கோலியும் அந்த முடிவையே எடுத்திருக்கிறார். இதனால் ரோகித் சர்மா இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் டி20 அணியின் கேப்டனாக பதவியேற்றார்.

ஆனால் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகவும் சுமாராக இருந்த நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் அந்தப் பணியை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம் வீரர்களை வைத்துக்கொண்டு நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்களே. இந்த பணியை தொடர விரும்புகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவும் என்னுடைய பார்மில் கேப்டன்சி என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்தது. நான் கேப்டன் ஆக என்னுடைய பணியை மிகவும் மகிழ்ச்சியாக மேற்கொள்கின்றேன். இந்தப் பணியை தொடர்ந்து செய்யவும் விரும்புகிறேன்.
ஆனால் எதிர்காலம் குறித்து பார்த்தோம் என்றால் இனி வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். தற்போது என்னுடைய கவனம் எல்லாம் தென்னாப்பிரிக்க தொடரை ஒட்டி தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற நிலையில் அது எங்களுடைய உத்வேகத்தை அதிகரித்தது.
டி20 உலக கோப்பைக்கு முன்பு நாங்கள் வெறும் ஆறு டி20 போட்டிகள் தான் இன்னும் விளையாட இருக்கிறோம். எனினும் ஐபிஎல் தொடரில் நாங்கள் 14 லீக் ஆட்டங்களில் விளையாடப் போகிறோம். ஒவ்வொரு வீரருக்கும் தங்களுடைய பணி என்னவென்று நன்றாகவே தெரியும். அதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. டி20 உலக கோப்பை முன் ஐபிஎல் விளையாடுவதால் அது எங்களுக்கு நல்ல அனுபவத்தையும் கொடுக்கும் என்று சூரிய குமார் யாதவும் தெரிவித்துள்ளார்.