மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த கையோடு, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசிய பேச்சுகள் பிசிசிஐ நிர்வாகிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும், 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் அவருக்கு 'கடைசி வாய்ப்பாக' இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கொல்கத்தா மற்றும் கவுகாத்தி டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. குறிப்பாக கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில், சுழற்பந்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு தோற்றது.

முதல் டெஸ்ட் நடந்த கொல்கத்தா போட்டிக்கு பிறகு பேசிய கம்பீர், "நாங்கள் கேட்டது இதுபோன்ற ஒரு ஆடுகளத்தைத்தான். எங்களுக்குத் துல்லியமாக இதுதான் கிடைத்தது. பிட்ச் நிர்வாகி எங்களுக்கு மிகவும் உதவினார். நாம் சரியாக விளையாடவில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்" என்று கூறியிருந்தார்.
அதாவது, "பேட்டிங்கிற்கு சிரமமான இந்த ஆடுகளத்தை நாங்கள்தான் கேட்டு வாங்கினோம்" என்று கம்பீர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது பிசிசிஐ வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "சொந்த மண்ணிலேயே பேட்டிங் செய்யத் திணறும் அளவுக்கு ஒரு ஆடுகளத்தைக் கேட்டு வாங்கிவிட்டு, அதில் தோற்ற பிறகு அதை பெருமையாகச் சொல்வதா?" என்பதே பிசிசிஐ-யின் கோபத்திற்குக் காரணம்.
ஏன் இன்னும் நீக்கவில்லை?
கம்பீர் மீது கடும் அதிருப்தி இருந்தாலும், பிசிசிஐ அவசரப்பட்டு அவரை நீக்க விரும்பவில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. கம்பீரை நீக்கினால், அந்த இடத்திற்கு தகுதியான மாற்றுப் பயிற்சியாளர் இப்போது கைவசம் இல்லை. அந்த தேடலை நடத்த கால அவகாசம் தேவை. அடுத்து டெஸ்ட், ஒருநாள் என தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் யோசனை தற்போதைக்கு பிசிசிஐயிடம் இல்லை.
ஆனாலும், கம்பீரின் பதவிக்கு ஆபத்து நீங்கவில்லை. 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் தான் கம்பீருக்கான கடைசி வாய்ப்பு. அந்தத் தொடரில் இந்திய அணி சொதப்பினால், கம்பீர் நிச்சயம் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கம்பீர் மீதான விமர்சனங்களுக்கு உதவிப் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் பதிலடி கொடுத்துள்ளார். "பிட்ச் நிர்வாகிகள் மீது பழி விழக்கூடாது என்பதற்காகவே கம்பீர் அந்தப் பழியைத் தன் மீது போட்டுக்கொண்டார். தோல்வி அடைந்தால் எல்லோரும் கம்பீரை மட்டுமே குறை சொல்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததை யாரும் கேட்பதில்லை. கம்பீரை தாக்குவதற்கென்றே சிலர் குறி வைத்து பேசுகிறார்கள்." என்று அவர் கூறினார். கோடக் பேச்சுக்கும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.