பெங்களூர்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா-இந்தியா நடுவேயான 2வது டெஸ்ட் பெங்களூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 214 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆன நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், பெங்களூரில் பெய்த மழை காரணமாக, நேற்று நடைபெறவிருந்த 2வது நாள் ஆட்டம், ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற வேண்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய மழை இன்னமும் நின்றபாடில்லை என்பதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பொறுத்து பார்த்த, நடுவர்கள், நண்பகல் சுமார் 12 மணியளவில், 3வது நாள், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
எனவே, 3வது நாள் ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. நடுவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரை மணி நேரத்திற்கு முன்பிருந்து மழை நின்று, ஓரளவுக்கு சூரிய வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. அப்படியிருந்தும் நடுவர்கள் இவ்வாறு அறிவித்தது மைதானத்தில் இருந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் பாதிப்பு பெங்களூர்வரை எதிரொலிப்பதால், இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
எனவே, 2வது டெஸ்ட் போட்டியின் எஞ்சிய நாட்களில், ஆட்டம் நடைபெறாமல் டெஸ்ட் போட்டி முடிவடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது.