மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் அதற்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என்பது போலவே அவர் பேசினார்.
ஆனால், உண்மையில் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி அணித் தேர்வில் செய்த பெரிய தவறு தான் பேட்டிங்கில் இந்திய அணி மோசமான நிலைக்கு செல்ல முக்கிய காரணம்.

முதல் டெஸ்ட் தோல்விக்கு பின் பேட்டிங் குறித்து ரோஹித் சர்மா அதிகம் விமர்சனம் செய்திருந்தால், அது அணித் தேர்வில் அவர் செய்த தவறை அவரே விமர்சனம் செய்வது போல இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படியே வேகப் பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் தான் தோல்விக்கு காரணம் என்பது போல பேசினார்.
மேலும், பத்திரிக்கையாளர்கள் இந்திய பேட்டிங் இரண்டு இன்னிங்க்ஸிலும் சேர்த்து 101 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடியது குறித்து கேள்வி எழுப்பிய போது, "நாங்கள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் இதற்கு முன் பேட்டிங்கை வைத்து வென்று இருக்கிறோம். அந்த சாதனைகளை பார்த்துவிட்டு பேசுங்கள்" என பேட்டிங்கிற்கு முட்டுக் கொடுத்து பேசி இருந்தார்.
ஆனால் உண்மையில், டெஸ்ட் போட்டி பேட்டிங்கில் டெக்னிகல் தவறு செய்யும் சுப்மன் கில், பவுன்ஸ் பந்துகளை வீசும் வேகப் பந்துவீச்சாளர்களை கண்டாலே பதற்றம் அடையும் ஸ்ரேயாஸ் ஐயர், தென்னாப்பிரிக்கா போன்ற கடினமான டெஸ்ட் ஆடுகளங்களில் ஆடிய அனுபவமே இல்லாத யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தென்னாப்பிரிக்காவில் அஸ்வினின் டெஸ்ட் பேட்டிங் சராசரியை விட குறைவான சராசரி வைத்துள்ள கேப்டன் ரோஹித் சர்மா ஆகிய நான்கு பேர் இந்திய அணியின் பேட்டிங்கில் இடம் பெற்று இருந்தனர்.
இது போன்ற பிரச்சனை உள்ள பேட்ஸ்மேன் ஒருவர் அணியில் இருந்தாலே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவு ஏற்படும். ஆனால், நிலையாக ஆடுவார்களா என தெரியாத இப்படி நான்கு வீரர்களை அணியில் தேர்வு செய்த நிலையில், போட்டியில் இவர்கள் நான்கு பேருமே ரன் குவிக்கவில்லை. இதில் கேப்டன் ரோஹித் சர்மாவுமே இடம் பெற்று இருப்பது தான் கொடுமை.
வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அதிக அனுபவம் வாய்ந்த புஜாரா, ரஹானே ஆகியோரை நீக்கியதற்கு எந்த உருப்படியான காரணமும் ரோஹித் சர்மாவிடம் இல்லை. அடுத்தகட்ட வீரர்களை தயார் செய்ய வேண்டும் என்ற வெற்று காரணத்தை மட்டுமே வைத்து கடினமான டெஸ்ட் தொடருக்கு அணித் தேர்வு செய்தது பெரிய தவறு. அதை தான் மூடி மறைத்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ரன் குவிக்கவில்லை என்றால் அடுத்து இந்தியாவில் நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அந்த இருவருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடாது. அவர்களுக்கு பதில் மீண்டும் புஜாரா, ரஹானே டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஃபார்முக்கு திரும்புவதும் முக்கியம்.