மும்பை : இந்திய டி20 அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேனாக காலடி எடுத்து வைத்து இருக்கும் திலக் வர்மா தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.
மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என தனக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் எல்லாம் பேட்டிங் செய்து அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆடி இருக்கிறார் திலக் வர்மா.
ஆனாலும், ஆஸ்திரேலிய டி20 தொடரில் கூட பாதியில் நீக்கப்பட்டார் திலக் வர்மா. அடுத்து நடக்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவர் பெயர் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திலக் வர்மா இதுவரை 13 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். அதில் 12 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 281 ரன்கள் சேர்த்துள்ளார். ஐந்து முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 141.91 ஆகும். பேட்டிங் சராசரி 40.14 ஆகும். இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
முதலில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்த திலக் வர்மா, சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் இறங்கி அதிரடி ஆட்டம் ஆடி அதிலும் தன்னை நிரூபித்தார்.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய உடன் இஷான் கிஷனுடன் சேர்த்து, திலக் வர்மா இடமும் பறிபோனது. இஷான் கிஷனுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் இறங்கிய நிலையில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனுக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வழிவிட்டு திலக் வர்மா நீக்கப்பட்டார்.
தற்போது தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் அணியில் இடம் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன் இடையே போட்டி இருக்கும் என்பதால் அதில் சிக்கி திலக் வர்மா தன் இடத்தை இழக்க வாய்ப்பு உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்றால் திலக் வர்மாவுக்கு இந்த சிக்கல் இருக்காது. ஆனால், இந்திய அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட வைக்கலாமா என்ற யோசனையில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.