டிராவிட் சாதனையை முறியடிக்கும் விராட் கோலி.. ஒரே கல்லில் 2 மாங்காய்.. 3வது டெஸ்டில் வரும் வாய்ப்பு!
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் ராகுல் டிராவிட்டின் முக்கிய சாதனையை முறியடிக்கவுள்ளார் விராட் கோலி.
இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மதியம் கேப்டவுனில் உள்ள நியூலாந்து மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளதால், இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற தீவிர முணைப்பு காட்டி வருகின்றன.

3வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியில் விராட் கோலி தனது 2 ஆண்டு கால மோசமான ஃபார்முக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் சதமடித்தார். அதன்பிறகு 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ளார் என்பதால் ரசிகர்கள் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். எனவே கேப்டவுன் மைதானம் அதனை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை
இந்நிலையில் கேப்டவுன் டெஸ்ட் போட்டியானது, விராட் கோலியின் சதம் மட்டுமல்லாது, முக்கிய சாதனை ஒன்றுக்கும் காரணமாக அமைய வாய்ப்புள்ளது. அதுவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் சாதனையையே முறியடிக்கலாம். தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட் 2வது இடத்தில் உள்ளார். அவர் 11 போட்டிகளில் 624 ரன்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

புள்ளிவிவரம்
தற்போதைய கேப்டன் விராட் கோலி 611 ரன்களுடன் இருக்கிறார். இதன் காரணமாக நாளை தொடங்கவுள்ள இந்த 3வது டெஸ்ட் போட்டியில் கோலி 14 ரன்கள் அடித்தால் டிராவிட்டின் சாதனையை முறியடித்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடிப்பார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். சச்சின் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1161 ரன்களை குவித்துள்ளார்.

2வது மைல்கல்
இதே போல மற்றொரு முக்கிய மைல்கல்லையும் விராட் கோலி எட்ட வாய்ப்புள்ளது. கோலி தற்போதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,854 ரன்களை குவித்துள்ளார். அவர் இந்த கேப்டவுன் டெஸ்டில் இன்னும் 146 ரன்களை அடித்தால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் இதற்கு முன்னர் சச்சின், டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லக்ஷ்மண், சேவாக் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications