உங்க சொந்த சாதனைக்காக டீமை பலிகடா ஆக்கலாமா? விராட் கோலிக்கு எதிராக பொங்கிய ரசிகர்கள்
கொல்கத்தா : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி கடைசி ஓவரில் நிதான ஆட்டம் ஆடி சதம் அடித்த நிலையில் அவர் சுயல ஆட்டம் ஆடியதாக ரசிகர்கள் பலர் பொங்கி இருக்கின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன் 35வது பிறந்த நாள் அன்று ஒருநாள் போட்டியில் 49வது சதம் அடித்தார். சச்சினின் நெருங்க முடியாத சாதனையை சமன் செய்தார். அதை மொத்த இந்தியாவும் கொண்டாடி இருக்க வேண்டும். மாறாக பொதுவான ரசிகர்கள் பலர் விராட் கோலி மிகவும் சுயநலமாக இந்த சதத்தை அடித்ததாக அவர் மீது பொங்கி உள்ளனர்.
கடைசி ஓவர்களில் அணிக்காக அதிக ரன் குவிக்க வேண்டும் என யோசிக்காமல் 40 ஓவர்களுக்கு பிறகும் கூட பவுண்டரி அடிக்காமல் சிங்கிள் ரன்கள் எடுத்ததாகவும் அவர் மீது கடும் விமர்சனத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் முன் வைத்துள்ளனர்.
கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். சுப்மன் கில் 24 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
அதன் பின் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டம் ஆடினார்கள். பிட்ச் மெதுவாக இருந்ததால் பந்தை கணித்து ஆடுவது சிரமமாக இருந்ததாக வர்ணனையாளர்கள் கூறினர். இந்த நிலையில், விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் 80ஐ ஒட்டியே இருந்தது.

அவர் 40வது ஓவரின் போது 95 பந்துகளில் 75 ரன்கள் அடித்து இருந்தார். என்னதான் பிட்ச் மெதுவாக இருந்தாலும் கடைசி 10 ஓவர்களில் ரன் குவிக்கவே எந்த அணியும் முயற்சி செய்யும். கையில் விக்கெட் இல்லை என்றால் கூட 45வது ஓவர் வரை நிதானித்து, அதன் பின் அடித்து ஆடலாம். ஆனால், இந்தியா 40வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இருந்தது.
அப்போது ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்த பின் வந்த சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். ஆனால், கோலி 50வது ஓவரின் முடிவில் 121 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்து இருந்தார். அதாவது கடைசி 10 ஓவர்களில் அவர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவில் ரன் எடுத்து இருக்கிறார்.
கடைசி 10 ஓவர்களில் வெறும் இரண்டு ஃபோர் மட்டுமே அடித்து இருந்தார். அவர் நினைத்து இருந்தால் கூடுதலாக ஃபோர், சிக்ஸ் அடித்து இருக்க முடியும். சூர்யகுமார் யாதவ், ஜடேஜா அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய போது கோலியால் ஆடி இருக்க முடியாதா? என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 49வது ஓவரில் சதத்தை அடித்த அவர் அதற்காகவே இப்படி ஆடுகிறாரோ என்ற எண்ணம் தான் வந்தது. 48.3வது ஓவரில் சதம் அடித்து சச்சினின் 49 ஒருநாள் சதம் அடித்த சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.
ஆனால், இந்த சாதனைக்காக அவர் நிதான ஆட்டம் ஆடினார். அணிக்காக கூடுதல் ரன் எடுக்க முயலவில்லை என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அவர் சுயநல ஆட்டம் ஆடினார் என வெளிப்படையான விமர்சனங்கள் ஆயிரக்கணக்கில் ட்விட்டரில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் போட்டி முடிந்த உடன் பேசிய விராட் கோலி, இந்திய அணி நிர்வாகம் தன்னை விக்கெட் இழக்காமல் நிதான ஆட்டம் ஆடுமாறு கூறியதாகவும், மற்ற பேட்ஸ்மேன்கள் உங்களை சுற்றி ரன் குவித்து ஆடுவார்கள் என கூறியதாகவும் அதனால் தான் நிதானமாக ஆடினேன் எனக் கூறி இருக்கிறார் விராட் கோலி. ஆனால், அதற்காக கடைசி 2 - 3 ஓவர்களில் கூட மற்றவர்கள் அடிக்கட்டும் என நிதான ஆட்டம் ஆடலாமா என அதையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications