விசாகப்பட்டினம்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். சுமார் 28 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாமல் இருந்த ஒரு பிரம்மாண்டமான உலகச் சாதனையை முறியடித்து இருக்கிறார். அதுவும் ஒரு சிக்ஸர் அடித்து அந்த சாதனையை தகர்த்தெறிந்த விதம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரே ஆண்டில் (Calendar Year) அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை செய்தார். 1997ஆம் ஆண்டு முதல் இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2025 மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியின் எட்டாவது ஓவரில், வேகப்பந்து வீச்சாளர் அயபோங்கா காகா பந்துவீசினார். க்ரீஸை விட்டு வெளியே வந்து, லாங்-ஆஃப் திசையில் மந்தனா அதை தூக்கி அடித்தார். அது சிக்ஸர் ஆனது. இந்தச் சிக்ஸரின் மூலம், ஆஸ்திரேலிய ஜாம்பவான் பெலிண்டா கிளார்க்கின் 970 ரன்கள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீராங்கனை பெலிண்டா கிளார்க், 1997-ம் ஆண்டில் 970 ரன்களைக் குவித்து இந்தச் சாதனையைப் படைத்திருந்தார். சுமார் 27 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்த அந்த இமாலய சாதனையைத்தான், ஸ்மிருதி மந்தனா தனது அதிரடி பேட்டிங்கால் தகர்த்து எறிந்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, மந்தனா ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும், தனது தொடக்க ஜோடியான பிரதிகா ராவலுடன் இணைந்து, இந்திய அணிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அவர் அமைத்துக் கொடுத்தார்.
இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியில் 49.5 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது. ரிச்சா கோஷ் அபாரமாக பேட்டிங் செய்து 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இருந்தார். 11 ஃபோர் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.