IND vs SL: "மேட்ச்சில் தோற்றால் கம்பீர் ஒரு குழந்தை போல அழுவார்" - உண்மையை பகிர்ந்த முன்னாள் கோச்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீர் மிகவும் கண்டிப்பானவர்; எப்போதும் சிரிக்க மாட்டார் என்பது போன்ற கணிப்புகள் அவரைப் பற்றி வலம் வருகின்றன. அவர் போட்டிகளின் போது ஆக்ரோஷமாக இருப்பார் எனவும் கூறப்படுவதுண்டு.
இந்த நிலையில் கவுதம் கம்பீரின் பால்ய கால கிரிக்கெட் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் அது குறித்து தற்போது பேசி இருக்கிறார். கவுதம் கம்பீர் போட்டியில் தோல்வி அடைந்தால் சிறு குழந்தை போல அழுவார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கவுதம் கம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் பேசியதாவது, "கவுதம் கம்பீர் ஒரு சிறு குழந்தை போன்றவர். அவர் இப்போதும் ஒரு அப்பாவி குழந்தைதான். அவர் மனதில் எந்த வன்மத்தையும் வைத்துக் கொள்ள மாட்டார். அவர் ஒரு 12 வயது சிறுவனை போலத்தான் நடந்து கொள்வார். ஆனால், மக்கள் அவரை ஆக்ரோஷமானவர் என்று கூறுகிறார்கள். ஆனால், அது வெற்றிக்கான அவரது அணுகுமுறை மட்டுமே." என்றார்.
மேலும், "நான் வலைப் பயிற்சி முடிந்தவுடன் அவரை போட்டிகளில் விளையாட வைப்பேன். அப்போது அவர் தோற்று விட்டால் அழுவார். அவருக்கு தோல்வி என்பது அப்போதும் பிடிக்காது. எனவே, அது போன்ற மனநிலை கொண்ட அவர் எப்போதும் தீவிரமான மனநிலையில் தான் இருப்பார். ஆனால், அவரது நட்பு வட்டத்திற்குள் நாம் சென்று விட்டால், அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்." என்றார் சஞ்சய் பரத்வாஜ்.
மேலும், "எப்படி வெற்றி பெற வேண்டும் என்று தெரிந்த ஒருவருக்கு தான், எப்படி தோல்வியை தவிர்ப்பது என்பதும் தெரியும். ஆனால், கம்பீர் ஒரு ஆக்ரோஷமான அணுகுமுறையை கொண்டுள்ளார், கடுமையாக நடந்து கொள்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால், கம்பீர் தூய்மையான இதயத்தை கொண்டவர். அவர் மிகவும் அமைதியானவர். பல இளம் வீரர்களை அவர் உருவாக்கி இருக்கிறார்" என்றார் சஞ்சய் பரத்வாஜ்.


Click it and Unblock the Notifications