இவருக்கா டீமில் இடமில்லை.. அதிக விக்கெட் லிஸ்டில் ஜாகிர் கான், பும்ராவை காலி செய்த ஷமி
மும்பை : உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் முகமது ஷமி.
இந்திய அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு அளிக்கப்படாமல் மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார் முகமது ஷமி. 2023 உலகக்கோப்பை தொடரில் கூட முதல் நான்கு போட்டிகளில் முகமது ஷமிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அணியில் இடம் பெற்றார் முகமது ஷமி.
இந்த உலகக்கோப்பை தொடரில் அணியில் வாய்ப்பு பெற்ற முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தி தன் திறமையை உலகுக்கு உணர்த்தினார். அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட்களை வீழ்த்தி மீண்டும் அணியில் அசைக்க முடியாத வீரராக மாறி இருந்தார்.

இரண்டு போட்டிகளில் ஆடி 9 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஷமி உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனை ஒன்றை நோக்கி வேகமாக முன்னேறத் துவங்கினார். இந்த நிலையில், இலங்கை போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய அவர் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் 45 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடருக்கு முன் ஷமி 11 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடி 31 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். தற்போது மூன்று போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் மொத்தமாக 14 போட்டிகளில் 45 விக்கெட்களை சாய்த்துள்ளார். இதன் மூலம், இந்திய அணிக்காக உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகிர் கான், ஜவகல் ஸ்ரீநாத், பும்ரா ஆகியோரை பின்தள்ளி இருக்கிறார் ஷமி. பும்ரா 15 போட்டிகளில் 32 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
முன்னதாக இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஜாகிர் கான், ஜவகல் ஸ்ரீநாத் இருந்தனர். அவர்கள் இருவருமே தலா 44 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். ஜாகிர் கான் 23 இன்னிங்க்ஸிலும், ஸ்ரீநாத் 33 இன்னிங்க்ஸிலும் 44 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.
முகமது ஷமி தற்போது 14 இன்னிங்க்ஸில் 45 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தி இருக்கும் இவருக்குத் தான் முதல் நான்கு போட்டிகளில் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதற்கு அணியின் சமநிலை என பல காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தியா இந்த முறை உலகக்கோப்பை வென்றால் அதற்கு ஷமி முக்கிய காரணமாக இருப்பார் என்பதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications