கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை தவற விட்டு, போட்டியை டை செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்தார். கேப்டனாக அதிக சிக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ஃபோர் என பல சாதனைகளை செய்தார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான துவக்கத்தை அளித்தார். அவர் 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அதிலும் அவர் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே தனது அரை சதத்தை நிறைவு செய்திருந்தார்.

33 பந்துகளில் அவர் அரை சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் அவர் ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர்களுக்குள் அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். வீரேந்தர் சேவாக் ஏழு முறை 10 ஓவர்களுக்குள் அரை சதம் அடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா மூன்று முறை அதை செய்துள்ளார்.
மேலும், இந்த போட்டியில் ரோஹித் சர்மா மூன்று சிக்ஸ் அடித்தார். அதன் மூலம் கேப்டனாக அதிக சிக்ஸ் அடித்து சாதனை செய்தார். அவர் 134 இன்னிங்ஸ்களில் 234 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனின் சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து கேப்டனாக இயான் மார்கன் 180 இன்னிங்ஸ்களில் 233 சிக்ஸ் அடித்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 ஃபோர் அடித்து இருந்தார். அதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ஃபோர் என்ற மைல் கல்லை கடந்தார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் துவக்க வீரராக 15000 ரன்களை எட்டினார். இந்த மைல் கல்லை வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார்.
சச்சின் டெண்டுல்கர் 331 இன்னிங்ஸ்களில் 15000 ரன்களை கடந்து இருந்தார். அவருக்கு அடுத்து ரோஹித் சர்மா 352 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை கடந்தார். மூன்றாவது இடத்தில் இருக்கும் டேவிட் வார்னர் 361 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்துள்ளார்.