கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிவம் துபேவை பந்துவீச்சில் நம்பாதது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணியின் அணுகுமுறை சரியானது தானா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போட்டியில், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது முழு நேர வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ரியான் பராக் அணியில் சேர்க்கப்பட்டார். அதனால், அணியில் ஒரே ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளராக முகமது சிராஜ் மட்டுமே இடம் பெற்றார். மற்றொரு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளரான சிவம் துபே பவர் பிளே ஓவர்களில் பந்து வீசினார்.

முகமது சிராஜை விட அபாரமாக பந்து வீசிய சிவம் துபே 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் குறைந்தது மூன்று ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்திருந்த நிலையில் சிவம் துபே ஓவருக்கு 2.25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
மேலும், அவர் வீசிய 24 பந்துகளில் 18 டாட் பால்கள் அடங்கும். அந்த 18 பந்துகளிலும் இலங்கை வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் பவர் பிளே ஓவர்களை தாண்டி மீண்டும் சிவம் துபேவுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும் எதிர்பார்த்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர்களையும், அதிக ரன்களை வாரி இறைத்த முகமது சிராஜ்-யும் மட்டுமே நம்பினார் கேப்டன் ரோஹித் சர்மா.
கேப்டன் ரோஹித் சர்மா, சிவம் துபேவுக்கு கடைசி வரை வாய்ப்பு அளிக்கவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பி 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிவம் துபேவுக்கு பந்து வீச வாய்ப்பு அளித்து இருந்தால் இலங்கை அணி 10 அல்லது 20 ரன்கள் குறைவாக எடுத்திருக்கும். அதனால் மட்டும் இந்த போட்டியின் முடிவு மாறி இருக்குமா? என நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.
ஏனெனில், இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது. அதே சமயம் சிறப்பாக செயல்படும் வீரருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை? என்ற கேள்வியையும் நாம் தவிர்க்க முடியாது. முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் ஆர்டரை மாற்றியது, இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்த போதும் மூன்றாவது போட்டியில் பேட்டிங் ஆர்டர் சகட்டுமேனிக்கு மாற்றப்பட்டது. ஒரு தவறை சரி செய்து கொள்ளாததும், சரியாக செயல்படும் வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படாததும் என்ன மாதிரியான அணுகுமுறை?