கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியை டை செய்தது இந்தியா. வெற்றி பெற்று இருக்க வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி மோசமாக பேட்டிங் செய்து டை செய்தது. முதலில் பந்து வீச்சின் போதே இந்திய அணி சில மோசமான செயல்பாடுகளை செய்திருந்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த பல முடிவுகள் தவறாக சென்றன. அதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஒரு காரணமாக இருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும், கேப்டன் ரோகித் சர்மாவையும் விளாசி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்களை இழந்து இருந்தது. அந்த அணி எப்படியும் 200 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து விடும் என்ற அனைவரும் எண்ணினர். ஆனால், இலங்கை அணியின் பின்வரிசை வீரர் டுனித் வெல்லாலகே அபாரமாக ஆடி 65 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.
கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியால் இலங்கை அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோகித் சர்மா இடையே சுப்மன் கில்லுக்கு ஒரு ஓவர் அளித்தது தான். அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. அதனால், அதுவரை இருந்த அழுத்தத்தில் இருந்து இலங்கை அணி விடுபட்டது.
மற்ற முக்கிய இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அந்த ஓவரை கொடுத்திருந்தால் அவர்கள் கட்டுக்கோப்பாக வீசி இலங்கை மீதான அழுத்தத்தை தக்க வைத்து இருப்பார்கள். போட்டி இந்திய அணியின் கைகளில் வராத போது, சம்பந்தமே இல்லாமல் பகுதி நேர பந்துவீச்சாளரான சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளித்தார் ரோகித் சர்மா. அதன் விளைவாகவே இலங்கை 230 ரன்கள் வரை எடுத்தது.
231 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி சேசிங் செய்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருந்ததால் இந்திய அணி மிக எளிதாக இந்த இலக்கை சேசிங் செய்து வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். ஆனால், சுப்மன் கில் 35 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து நான்காம் வரிசையில் கே எல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி இருக்க வேண்டும்.
ஆனால், வாஷிங்டன் சுந்தரை அனுப்பினார் கேப்டன் ரோகித் சர்மா. அது தவறான முடிவாக அமைந்தது. அவர் நான்கு பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி 87 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. வாஷிங்டன் சுந்தருடையது முக்கிய விக்கெட் இல்லை என்றாலும் விக்கெட் வீழ்ச்சி என்பது மனதளவில் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை தான் அளிக்கும். அதுதான் இங்கேயும் நடந்தது.
அடுத்து விராட் கோலி 24 ரன்களில் விக்கெட்டை இழந்து சென்றார். ஸ்ரேயாஸ் ஐயர் 23, ராகுல் 31, அக்சர் பட்டேல் 33 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன் பின் சிவம் துபே எட்டாம் வரிசையில் களம் இறங்கினார். அவர் பின்வரிசை வீரர்களுடன் சேர்ந்து விரைவாக ரன் சேர்த்தார். அவர் 24 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.
சரியாக போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார். இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போது இந்திய அணி 9 விக்கெட்களை இழந்திருந்தது. கடைசி விக்கெட்டுக்கு அர்ஷ்தீப் சிங் களத்துக்கு வந்தார். அவர் டக் அவுட் ஆனார். இதை அடுத்து இந்திய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் மூலம் போட்டியும் டை ஆனது.
கேப்டன் ரோகித் சர்மா சுப்மன் கில்லுக்கு கொடுத்த அந்த ஒரு ஓவரும், பேட்டிங் வரிசையில் வாஷிங்டன் சுந்தரை நான்காம் வரிசையில் ஆட வைத்ததும் மிகப்பெரிய தவறாக அமைந்தது. இந்த முடிவுகள் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த போட்டி டை ஆக காரணமாக இருந்தன.