கொழும்பு : ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுவதற்கான டாஸ் வீசப்பட்ட பிறகு மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. எனினும் மழை விட்டு விட்டுப் பெய்யுமே தவிர ஆட்டத்தை பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்று கூறப்படுகிறது.
எனினும் இலங்கை வானிலையை சரியாக கணிக்க முடியாது என்பதால் ஒருவேளை மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்தானால் என்ன நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். பொதுவாக ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் ரிசர்வ் டே அறிவிக்கப்படும்.

ஆனால் உலகக்கோப்பை தற்போது நெருங்கி வருவதால் ஆசிய கோப்பை போட்டிக்கு எந்த ஒரு ரிசர்வ் டேவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் போட்டியை இன்று முடிக்க தான் பார்ப்பார்கள். அதிகபட்சமாக இந்த போட்டியை 20 ஓவர் ஆட்டமாக நடத்த நடுவர்கள் முயற்சி செய்வார்கள். மழை பெய்தால் நிச்சயம் பந்து வீசும் அணிக்கு பாதகமாக தான் இருக்கும். ஏனென்றால் சுழற்பந்து வேகப்பந்து வீச்சு எதுவுமே எடுபடாது.
மேலும் கொழும்பு ஆடுகளத்தில் மழைக்குப் பிறகுதான் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக மாறுகிறது. இதனால் மழை பெய்து வருவது இந்தியாவுக்கு நல்லது கிடையாது. ஒருவேளை இன்றைய ஆட்டம் நடத்த முடியாமல் போனாலோ அல்லது டக்வொர்த் லூயிசை அமுல்படுத்துவதற்கு தேவையான 20 ஓவர்களை வீச முடியாமல் போனாலோ ஆட்டம் வெற்றி தோல்வி என்று முடிவடைந்ததாக கருதப்படும்.

மேலும் கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த வகையில் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக இலங்கை அணி தான் தற்போது இருப்பதால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டாலும் அது இலங்கையிலே தான் இருக்கும். நாம் வெறும் கையை வீசிக்கொண்டு வர வேண்டியது தான். ஏற்கனவே டாஸ் பாதகமாக விழுந்தது மழை பெய்து வருவது எல்லாம் இந்தியாவுக்கு தடையாக தான் பார்க்கப்படுகிறது. இந்த தடைகளை உடைத்து நமது வீரர்கள் சாம்பியன் என்பதை நிரூபிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.