
கடினமான இலக்கு
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதனால் 3வது நாளிலேயே ஆட்டம் முடிந்துவிடும் என்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது.

ரசிகர்களின் சேட்டை
இந்நிலையில் ஆட்டத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறி ரசிகர்கள் களத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அணியின் 2வது இன்னிங்ஸின் 6வது ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. குசல் மெண்டீஸுக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது 3 ரசிகர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி குதித்து உள்ளே வந்தனர்.

விராட் கோலியின் செயல்
மைதானத்திற்குள் ஓடிய அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சிரமப்பட்டு பிடித்து இழுத்துச்சென்றனர். அப்போது அங்கு சென்ற விராட் கோலி, அவர்களை எதுவும் செய்யாதீர்கள், விடுங்கள் எனக்கூறி,பின்னர் ரசிகர்களிடம் என்ன வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூற, உடனடியாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் விராட் கோலி.

கோபக்காரர்?
மிகவும் கோபக்காரர் விராட் கோலி, ரசிகர்களை மதிக்கமாட்டார் என பல விமர்சனங்கள் இதற்கு முன்னர் எழுந்துள்ளன. ஆனால் அவரின் உண்மையான குணம் இதுதான் என நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் களத்திற்குள் விராட் கோலியுடன் புகைப்படம் எடுக்கும் அந்த வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











