IND vs UAE: இதுக்குத்தான் யா குல்தீப் யாதவ் வேணும்.. ஒரே ஓவரில் UAE காலி.. 3 விக்கெட்டுகள்
துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) எதிர்கொண்டது இந்திய அணி. இந்தப் போட்டியில் முதல் 2 விக்கெட்களை இழந்தாலும் ரன் குவித்து வந்த அமீரக அணியை "சைனாமேன்" குல்தீப் யாதவ், ஒரே ஓவரில் கதிகலங்க வைத்தார். போட்டியின் 9 வது ஓவரிலேயே ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்டிங் வரிசையை சின்னாபின்னமாக்கினார்.
இந்தப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணிக்கு, ஜஸ்பிரித் பும்ரா முதல் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கத்தைஅளித்தார். அதன்பின்னர், வருண் சக்கரவர்த்தியும் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.
இதனால், ஐக்கிய அரபு அமீரக அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தது. கேப்டன் முஹம்மது வசீம் களத்தில் இருந்ததால், ஒரு சவாலான ஸ்கோரை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், போட்டியின் 9வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ், ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றினார். தனது மாயாஜால சுழலால் அவர் நிகழ்த்திய வித்தையில், ஐக்கிய அரபு அமீரக பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்து போனார்கள்.
குல்தீப்பின் மேஜிக் ஓவர்:
முதல் விக்கெட் (8.1 ஓவர்): ஓவரின் முதல் பந்தையே, குல்தீப் யாதவ் மிகவும் சாதூரியமாக தூக்கி வீசினார். பேட்ஸ்மேன் ராகுல் சோப்ராவை பெரிய ஷாட் ஆடத் தூண்டும் வகையில் வீசப்பட்ட அந்தப் பந்தை, அவர் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்க முயன்றார். ஆனால், பந்தை சரியாக டைமிங் செய்யத் தவறியதால், பந்து நேராக எல்லைக்கோட்டின் அருகே நின்றிருந்த சுப்மன் கில்லிடம் தஞ்சம் புகுந்தது. இதனால், ராகுல் சோப்ரா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட் (8.4 ஓவர்): அதே ஓவரின் நான்காவது பந்தில், ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டனும், நம்பிக்கை நட்சத்திரமுமான முஹம்மது வசீமை தனது சுழல் வலையில் சிக்க வைத்தார் குல்தீப். ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற வசீம், பந்தை தவறவிட, அது நேராக அவரது கால் பேடில் பட்டது. இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக அப்பீல் செய்ய, நடுவர் உடனடியாக விரலை உயர்த்தினார். வசீம் ரிவ்யூ செய்தார். ஆனால், ரீப்ளேவில் பந்து ஸ்டம்பை தாக்குவது தெளிவாகத் தெரிந்ததால், அவர் 19 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
மூன்றாவது விக்கெட் (8.6 ஓவர்): ஓவரின் கடைசி பந்தில், தனது பிரம்மாஸ்திரமான கூக்ளியை வீசி, புதிய பேட்ஸ்மேன் ஹர்ஷித் கௌஷிக்கை க்ளீன் போல்டாக்கினார் குல்தீப். பந்தின் திசையை கணிக்கத் தவறிய கௌஷிக், கவர் திசையில் தள்ளிவிட முயன்றார். ஆனால், பந்து அவரது பேட்டின் உள்விளிம்பில் பட்டு, ஸ்டம்புகளைச் சிதறடித்தது. இதன் மூலம், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
8 ஓவர்களில் 47/2 என இருந்த ஐக்கிய அரபு அமீரக அணி, குல்தீப் யாதவின் அந்த ஒரு ஓவருக்குப் பிறகு 50/5 எனச் சரிந்து மீள முடியாத அதிர்ச்சிக்குள்ளானது. குல்தீப் யாதவ் மொத்தம் 4 விக்கெட்களை சாய்த்தார். அவரைத் தொடர்ந்து வந்த சிவம் துபேவும் தனது பங்கிற்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். 13.1 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.


Click it and Unblock the Notifications