டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி நாளை அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அமெரிக்கா ஒரு கத்துக்குட்டி அணியாகக் கருதப்படுவதால், இந்த ஆட்டத்தில் இந்தியா முழு பலத்துடன் களமிறங்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் அமெரிக்க அணியை சாதாரணமாக எண்ணி விட முடியாது. பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய ஏ அணிக்கு எதிராக 200 ரன்களைக் குவித்ததுடன், கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போன்ற பெரிய அணியையும் அவர்கள் வீழ்த்தியுள்ளனர்.

இரண்டாவது சுற்று ஆட்டங்கள் கடும் நெருக்கடி நிறைந்ததாக இருக்கும். அதற்கு முன்னதாக, முதல் சுற்றுப் போட்டிகள் வீரர்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயார்படுத்தும் பயிற்சி களமாக அமையும். இதனால் இந்திய அணி தங்கள் முழு பலத்தையும் முதல் போட்டிகளிலேயே பயன்படுத்திக்கொள்ளும்.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒன்பது பவுலர்கள் பந்து வீசியபோதும், பும்ரா எந்த ஓவரையும் வீசவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பும்ரா நிச்சயம் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பதவியேற்றபோது, வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்.
டி20 உலகக் கோப்பையில் அவர் அப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி அதன் முழு பலத்துடன் களமிறங்குவது உறுதி. வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களை முக்கியத்துவம் இல்லாத ஆட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வருண் சக்கரவர்த்தி பந்துவீசும் முறையை மற்ற அணிகளின் நிபுணர்கள் கண்டறிந்துவிடுவார்கள் என்பதால், அவரை ரகசியமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், அணியின் சமநிலையை மாற்றக்கூடாது என்ற முடிவில் உள்ள இந்தியா, சிறந்த பிளேயிங் லெவனைப் பயன்படுத்தி களமிறங்கும் எனத் தெரிகிறது.