கயானா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை பிளேயிங் லெவனின் செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்த நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் இன்றைய ஆட்டம் நடைபெறுவதால் போட்டி போக போக ஆடுகளம் தோய்வாக மாறும். இதனால் தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் போவெல் கூறியுள்ளார்.
இதேபோன்று ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.
அவருக்கு பதிலாக ராஸ்ட்ன் செஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் போவெல் கூறினார். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வரலாற்றை துரத்துகிறோம் என்றும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை இந்தியா கணித்து விட்டால் அவர்கள் எங்களை வெளுத்து கட்டி விடுவார்கள் என்றும் ரோமன் போவெல் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.இஷான் கிஷனுக்கு பதில் அறிமுக வீரராக யாசஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதேபோன்று குல்தீப் அணிக்கு திரும்பியிருப்பதாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்திருந்தோம். எனினும் சேஸிங் செய்வதிலும் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பூரான் சிறப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங் செய்து வருகிறார். அவரை ஆட்டம் இழக்க வைப்பதற்கு நாங்கள் பெரிய திட்டம் எதுவும் தீட்டவில்லை. சிம்பிளாக வைத்திருக்கிறோம் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இந்திய அணிக்குள் ஜெய்ஸ்வால் சேர்க்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது தான் ஹர்திக் பாண்டியா இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.