ஃபுளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களம் இறங்கி உள்ளது.
இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெறுகிறது. இங்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆறு டி20 போட்டியில் இந்தியா விளையாடி நான்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோமன் போவெல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இது குறித்து பேசிய அவர் இந்த ஆடுகளும் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இதனால் நாங்கள் பேட்டிங் செய்யப் போகிறோம். முதலில் அதிக ரன்களை அடித்து விட்டு பின் அதனை தற்காத்துக் கொள்ள விரும்புகிறோம்.
இந்தியா போன்ற பெரிய அணிக்கு எதிராக தொடரை வெல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்நோக்கி எங்களுடைய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காயத்திலிருந்து ஜேசன் ஹோல்டர் குணமடைந்திருக்கிறார். அவர் அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோன்று ஜான்சன் சார்லஸ்க்கு பதிலாக சாய் ஹோப்பும், ராஸ்டன் சேஸ்க்கு பதிலாக ஓடியன் ஸ்மித் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள் என்று போவெல் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா நாங்களும் டாஸ் வென்று இருந்தால் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்போம். ஆடுகளம் பெரிய அளவில் மாறாது என நினைக்கிறேன். கடந்த ஆட்டத்தில் எங்களுடைய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம். இன்றைய ஆட்டத்தில் ரன் அடிக்க வேண்டிய பசியை அவர்கள் வெளிக்காட்ட வேண்டும். கடந்த போட்டியில் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள்.
இந்த ஆட்டத்தில் நாங்கள் அதே வீரர்களுடன் தான் களமிறங்குகிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் ஆக்ரோஷமாக விளையாடி விக்கெட்டுகளை எங்களுக்கு எடுத்து தருவார்கள் என நம்புகிறோம். நாங்கள் எந்த திட்டத்தையும் பெருசாக வகுக்கவில்லை. சிம்பிளாக எடுத்துக் கொண்டு விளையாட போகிறோம். அதே சமயம் எங்களுடைய அதிரடியும் குறையாது என ஹர்திக் பாண்டியா கூறினார். கில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் ஹர்தில் பாண்டியா வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.