டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றிய பின், இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் தனது கேப்டன்சி அனுபவம் மற்றும் போட்டியின்போது எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்து மனம் திறந்துள்ளார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர் மீது ரசிகர்கள் சில விமர்சனங்களை முன் வைத்தனர்.
குறிப்பாக, பெரும் விவாதப் பொருளாக மாறிய 'ஃபாலோ-ஆன்' முடிவுக்கான காரணத்தை பற்றி சுப்மன் கில் தெளிவாக விளக்கினார். அதே போல, ஆறாவது பந்துவீச்சாளராக நிதிஷ்குமார் ரெட்டியை பயன்படுத்தாதது ஏன் என்பது பற்றியும் ஒரு அசத்தல் விளக்கத்தை கூறினார். போட்டிக்கு பின் சுப்மன் கில் என்ன பேசினார் என விரிவாக பார்க்கலாம்.

தனது கேப்டன்சி அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், "ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சரியான முடிவுகளை எடுப்பதே முக்கியம். எது சிறந்த முடிவாக இருக்குமோ அதை எடுக்க முயற்சிக்கிறேன். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு மிகப்பெரிய கௌரவம். நான் மெதுவாக இந்தக் கௌரவத்திற்குப் பழகி வருகிறேன். இந்த வீரர்களை நிர்வகித்து, அணியை வழிநடத்துவது ஒரு சிறந்த அனுபவம்" என்று தனது கேப்டன்சி தத்துவத்தை விளக்கினார்.
போட்டியின் திருப்புமுனையாக அமைந்த ஃபாலோ-ஆன் முடிவு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு சுப்மன் கில் விரிவாகப் பதிலளித்தார். "நாங்கள் முதல் இன்னிங்ஸில் சுமார் 300 ரன்கள் (270 ரன்கள்) முன்னிலையில் இருந்தோம். அப்போது நாங்கள் யோசித்தோம்; ஒருவேளை நாங்கள் மீண்டும் பேட்டிங் செய்து, ஒரு 500 ரன்கள் எடுத்தாலும், போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியிருந்தால், அது எங்களுக்கு ஒரு கடினமான நாளாக அமையக்கூடும். அதனால், அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தோம். அதுதான் அந்த முடிவின் பின்னணியில் இருந்த சிந்தனை" என்று தனது முடிவை அவர் நியாயப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு அதிக அளவில் பந்துவீச வாய்ப்பு கிடைக்காதது குறித்துப் பேசிய கில், அணியின் நீண்டகாலத் திட்டத்தை வெளிப்படுத்தினார். "அவருக்கு இந்தப் போட்டியில் பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், வெளிநாட்டுத் தொடர்களில் மட்டும் வீரர்களை நேரடியாகக் களமிறக்குவதை நாங்கள் விரும்பவில்லை. வெளிநாடுகளில் போட்டிகளை வெல்ல உதவும் என்று நாங்கள் நம்பும் சில வீரர்களை, உள்ளூர் போட்டிகளிலேயே தயார்படுத்தி, வளர்க்க விரும்புகிறோம். ஏனென்றால், வெளிநாட்டு வெற்றிகள்தான் எங்களுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது" என்று தனது தொலைநோக்குப் பார்வையை அவர் விளக்கினார்.
தனது பேட்டிங் குறித்துப் பேசிய அவர், கேப்டன்சி அழுத்தத்தைத் தனது பேட்டிங்கில் இருந்து எப்படித் தனியாகப் பிரித்துப் பார்க்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தினார். "நான் பேட்டிங் செய்யக் களத்திற்குச் செல்லும்போது, நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே சிந்திக்கிறேன். மூன்று, நான்கு வயதிலிருந்தே நான் பேட்டிங் செய்து வருகிறேன். அதனால், களத்திற்குள் சென்றால், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்" என்று சுப்மன் கில் கூறினார்.
வெற்றி பெற்றாலும், தனது முடிவுகளுக்கான காரணங்களைத் தெளிவாக விளக்கிய சுப்மன் கில்லின் இந்தப் பேட்டி, ஒரு கேப்டனாக அவர் எவ்வளவு முதிர்ச்சியடைந்து வருகிறார் என்பதைக் காட்டுகிறது. மேலும், கேப்டனாக தனது முதல் தொடர் வெற்றியை பெற்று இருக்கிறார் சுப்மன் கில்.