கொல்கத்தா டெஸ்ட்: அறிமுகப் போட்டியில் ரோஹித் அபார சதம் !! இந்தியா - 354/6
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 354 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் ரோஹித் சர்மா தமது முதல் சதமடித்து அசத்தினார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் டெண்டுல்கர் தமது 200வது போட்டியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்தப் போட்டி மும்பையில் நடைபெற இருக்கிறது. முன்னதாக கொல்கத்தாவில் அவர் பங்கேற்கும் 199வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு விக்கெட் எடுத்திருந்தார் டெண்டுல்கர். நேற்று 238 ரன்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டம் இழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்திருந்தது. இன்று காலை 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.

தொடக்கத்தில் தடுமாற்றம்
இந்திய அணி இன்று தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தவான் 23 ரன்கள், முரளி விஜய் 26 ரன்கள், புஜாரா 17 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

10 ரன்களில் டெண்டுல்கர் அவுட்
எப்படியும் ஒரு சதமடித்துவிடமாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரோ 10 ரன்களிலேயே அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார்.

87/5
அதே போல் கோஹ்லியும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி 31 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்களை எடுத்து தடுமாறியது.

காப்பாற்றிய டோணி- ரோஹித்
பின்னர் களத்தில் இருந்த அறிமுக வீரர் ரோஹித் சர்மாவும் கேப்டன் டோணியும் நிலைத்து நின்று ரன்களைக் குவித்தனர். இந்திய அணி 156 ரன்களை எட்டிய போது டோணி அவுட் ஆனார். அவர் 42 ரன்களை எடுத்திருந்தார்.

ரோஹித்துடன் இணைந்து அசத்திய அஸ்வின்
51வது ஓவரில் அஸ்வின் களத்தில் இறங்கினார். அஸ்வினும் ரோஹித்தும் சேர்ந்து நிதானமாக ரன் சேர்த்தனர்.

சதமடித்து சாதித்தர் ரோஹித்
தமது முதல் போட்டி என்றாலும் நிலைத்து நின்று சதத்தைக் கடந்துள்ளார் ரோஹித் சர்மா. அஸ்வினும் சதம் நோக்கி பயணிக்கிறார். இன்றைய 2வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 354 ரன்களைக் குவித்துள்ளது. ரோஹித் சர்மா 127 ரன்களுடனும் அஸ்வின் 92 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications