முதல் முறையாக மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்.. இந்தியாவில் போட்டிகளை நடத்த ஐசிசி முடிவு
மும்பை: 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடர் இந்தியா நடத்தவுள்ளது. ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆறு அணிகள் பங்கேற்கும் தொடக்க பதிப்பின் அனைத்துப் போட்டிகளும் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மற்றும் வதோதராவில் உள்ள வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடர் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஆண்டு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தேவையான சீர்திருத்தங்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதால், இப்போட்டி தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை நடத்துவதற்கு வங்கதேசம், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளை ஐசிசி அதன் தரவரிசை அடிப்படையில் பரிசீலித்தது. இறுதியாக, இலங்கைக்குப் பதிலாக இத்தொடரை நடத்த இந்தியா பரிந்துரைக்கப்பட்டது. இந்த முடிவிற்கு செப்டம்பர் 1 அன்று ஐசிசி வாரியம் ஒப்புதல் அளித்தது.
"2027 ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபி மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இத்தொடரின் முதல் சீசன் என்பதால், உலகின் சிறந்த அணிகளை ஒரு கடுமையான போட்டியில் ஒன்றிணைக்கும். அதே நேரத்தில் உலகளாவிய அரங்கில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அணிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்" என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு ஆண்டும் ஐசிசியின் முக்கிய மகளிர் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால், மகளிர் கிரிக்கெட், அதன் வீராங்கனைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்" என்றும் அவர் கூறினார்.
மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்கப் பதிப்பில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.இந்தத் தொடர் டி20 வடிவில் விளையாடப்படும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிப்ரவரி 28 அன்று நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
இந்தியா தற்போது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனாக உள்ளது. கடந்த ஆண்டு நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேபோல், ஆஸ்திரேலியா தற்போதைய டி20 உலகக் கோப்பை சாம்பியனாக உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது ஏழாவது பட்டத்தை வென்றது.


Click it and Unblock the Notifications

