பயிற்சி ஆட்டமும் இல்லை.. பயிற்சியும் இல்லை.. இந்தியன் பாய்ஸ் என்ன பண்ண போறீங்க?
கேப் டவுன்: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. ஒரு புது வருடத்தை எப்படி தொடங்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களிடம் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் இப்படித்தான் தொடங்க வேண்டும் என்று கூறுவார்கள்.
வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்கும் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும். இவ்வளவு நாட்கள் நடைபெறும் இந்த போட்டி கண்டிப்பாக தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும் . ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்த தொடர் எப்படிப்பட்ட அனுபவத்தை தரும் என்பது சந்தேகமாக இருக்கிறது.
3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் என பெரிய அளவில் நடக்க உள்ள இந்த போட்டி இந்திய வீரர்களின் உண்மையான திறமையை வெளியே காட்டும்.

பயிற்சி ஆட்டம் இல்லையே
டிசம்பர் இறுதியில் இந்தியா இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை விளையாடி முடித்தது. அதன் பின் இருந்த மூன்று நாள் இடைவெளியில் தென்னாப்பிரிக்க செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கோஹ்லி அனுஷ்கா திருமண வரவேற்பு காரணமாக வீரர்கள் இரண்டு நாள் கழித்து தான் தென்னாப்பிரிக்கா சென்றார்கள். இதனால் இந்தியா தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக ஆட இருந்து பயிற்சி ஆட்டம் ரத்தானது.

மைதானத்தில் பயிற்சியும் இல்லை
இந்திய அணி பவுலர்கள் இந்திய பிட்சில் புலி. ஆனால் தென்னாப்பிரிக்க பிட்சில் பூனை என்று கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு நம்முடைய பவுலிங் அங்கு மோசமாக இருக்கும். ஷாகிர் கான் இருந்த வரை இந்தியா ஓரளவுக்கு நன்றாகவே அங்கு பவுலிங் செய்தது. ஆனால் தற்போது மழை காரணமாக இளம் வீரர்கள் அங்கு பயிற்சி எடுக்க முடியாமல் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி எடுக்கிறார்கள். இதனால் அந்த பிட்ச் குறித்த போதிய அறிவு அவர்களுக்கு இல்லாமல் போகும்.

இந்தியா பேட்டிங்
இந்திய பேட்டிங் ஆர்டரே பார்த்து பயப்படும் ஒரே நபர் என்றால் அது ஸ்டெய்ன் தான். ஐபிஎல் போட்டியில் அவர் பந்தை பறக்கவிட்டாலும், தென்னாப்பிரிக்க தொடரில் எப்போதும் இந்தியா அவரிடம் அடங்கி விடுகிறது. அவரது பவுன்ஸ் ஆகும் பந்துகளை சமாளிக்கவே இந்தியா தனியாக கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும். ஒரு ஓவரில் 6 பாலும் பவுன்சிங் போடும் திறமையை அவர்களிடம் இந்திய பவுலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் நம்பிக்கை
இத்தனை பாதகமான விஷயங்கள் இருந்தாலும் இந்தியா வெற்றிபெற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தியா ஒரு டெஸ்ட் தொடரை கூட தென்னாப்பிரிக்காவில் வென்றது இல்லை. முதல் முறை கண்டிப்பாக இந்தியா இந்த சாதனையை படைக்கும் என்றும் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.இப்போது இந்திய அணியில் ஒன்றுக்கு மூன்று தலை சிறந்த கேப்டன்கள் வேறு இருக்கிறார்கள் என்பது கூடுதல் பலம் ஆகும்.


Click it and Unblock the Notifications