சென்னை: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரையும் இந்தியா வெல்லும் என்று இந்திய அணியின் தேர்வாளர் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
2வது ஒரு நாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பந்து வீச்சாளர்களை முழுவதுமாக குறை கூற முடியாது. காரணம், இந்தப் போட்டியின் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது. எனவே பந்து வீச்சாளர்களைக் குறை சொல்ல முடியாது.
நமது பீல்டிங்கில் குறைகள் உள்ளன. அது சரி செய்யப்படும். முன்னேற்றம் தேவைப்படுகிறது.
டோணி மீதான தடை துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் இதை நாங்கள் எதிர்த்து அப்பீல் செய்யப் போவதில்லை. ஐசிசி விதிமுறைகளை மதிக்கிறோம்.
டோணிக்குப் பதில் திணேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி போட்டியில் சிறப்பாக ஆடியதால் இந்த வாய்ப்பு அவருக்கு. சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன்.
இந்திய அணி ஒரு நாள் தொடரையும் வெல்லும் என உறுதியாக நம்புகிறேன் என்றார் ஸ்ரீகாந்த்.
சம்பளம் அதிகரிப்பு...
இதற்கிடையே, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட இந்திய அணி தேர்வாளர்களுக்கு பெருமளவில் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வாளர் குழுவில் தற்போது ஸ்ரீகாந்த் தலைவராக இருக்கிறார். அவர் தவிர, யஷ்பால் சர்மா, நரேந்திர ஹிர்வானி, ராஜா வெங்கட், சுரேந்திர பாவே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 25 லட்சம் சம்பளமாக தரப்படுகிறது. தற்போது இது ரூ. 40 லட்சமாக கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல ஜூனியர் தேர்வாளர்களுக்கான சம்பளம் ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.