Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் கண்பார்வையற்றோர் அணி.. ஒரு தோல்வி கூட சந்திக்காமல் இமாலய சாதனை

கொழும்பு: இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு உலகக்கோப்பை வெற்றி சேர்ந்துள்ளது. கண்பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி நேபாளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் உலக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல், அசைக்க முடியாத அணியாக வலம் வந்த இந்திய மகளிர் கண்பார்வையற்றோர் அணி, இறுதிப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வெற்றி பெற்றது.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்தியப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால், நேபாள அணியால் ரன் குவிக்க முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.

India Wins Inaugural Blind Women s T20 World Cup Creates History beating Nepal in Final

115 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. வெறும் 12.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. இன்னும் 47 பந்து மீதமிருந்த நிலையிலேயே இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர் குலா ஷரீர் . இவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. லீக் சுற்றுகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாளம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளையும் வீழ்த்தியது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அரையிறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்தில்தான் நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தது. அந்த வெற்றி கிடைத்து மூன்று வாரங்களே ஆன நிலையில், தற்போது கண்பார்வையற்றோர் அணியும் உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் உச்சமாக அமைந்துள்ளது.

கண்பார்வையற்றோருக்கான கிரிக்கெட்டிற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இந்த விளையாட்டுக்குக் கூடுதல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 23, 2025, 17:17 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+