கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கவுத் தந்தைக்கு நேர்ந்த துயரம்.. போராடி நீதி வாங்கி தந்த மகள்
மும்பை: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கிராந்தி கவுட், தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட துயரமான சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்டு தனது தந்தைக்கு நியாயத்தை வாங்கி தந்துள்ளார். அவரது தந்தை முன்னா சிங், மத்திய பிரதேச காவல்துறையில் இருந்து 13 ஆண்டுகளுக்கு முன்பு சஸ்பென்ட் செய்யப்பட்ட வழக்கில், கிராந்தியின் விடாமுயற்சியால் முதலமைச்சரின் தலையீட்டுடன் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.
2012 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வந்த முன்னா சிங், தேர்தல் கடமையின் போது அலட்சியம் காட்டியதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்தக் கடுமையான முடிவு, அவர்களின் பூர்வீக கிராமமான கூவாராவில் குடும்பத்திற்கு நிதி நெருக்கடியையும் சமூக ரீதியான அவமானத்தையும் ஏற்படுத்தியது.

அதன் பிறகு நீண்ட சட்டப் போராட்டமும் பல வருடத் துன்பங்களும் தொடர்ந்தன. இருப்பினும், குடும்பத்தினர் நம்பிக்கையை இழக்கவில்லை.இந்தக் கடினமான காலகட்டத்தில், கிரிக்கெட் கிராந்திக்கு ஒரு உயிர்மூச்சாக மாறியது. வீட்டிலுள்ள பொறுப்புகளுக்கு மத்தியிலும், அவர் தளராமல் பயிற்சி செய்தார். சில சமயங்களில் கைவிட்டு விடலாமா என்ற எண்ணங்கள் வந்தாலும், தனது உறுதியால் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
அவரது வெற்றி குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், கிராமத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்தது.கிராந்தியின் கிரிக்கெட் வாழ்க்கை வளர, அவரது தந்தையின் நீண்டகால வழக்கும் மீண்டும் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து தனது தந்தைக்கு நியாயம் வேண்டும் என்றால், தனது துரல் வெளியே கேட்கும் அளவுக்கு வளர வேண்டும் என தீவிரம் காட்டி தற்போது தந்தைக்கு நியாயத்தை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவிடம், தனது தந்தைக்கு நடந்தது குறித்து கிராந்தி முறையிட்டார். தற்போது முதலமைச்சர் தலையீட்டால், அரசு இந்த சஸ்பென்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்தது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மாநில அதிகாரிகள் சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்து, முன்னா சிங்கை மீண்டும் பணிக்கு அமர்த்தினர்.


Click it and Unblock the Notifications