IND vs SL: 5வது டி20 போட்டியிலும் இலங்கை தோல்வி.. 5-0 என ஓயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி
திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று தொடரை முழுமையாக 5க்கு பூஜ்ஜியம் என கைப்பற்றி இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வென்ற பிறகு தற்போது டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது.
வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்தத் தொடருக்காக இந்திய அணி தங்களது அணியை தயார் செய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்த சூழலில் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க, தமிழக வீராங்கனை குணாளன் கமலினி அறிமுகப் போட்டியில் விளையாடி 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதேபோன்று ஹர்லின் தியோல் 13 ரன்களில் ஆட்டம் இழக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாக நின்று 43 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் அமிஞ்சித் கவுர் 21 ரன்களும் அருந்ததி ரெட்டி 27 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது.
இதனை அடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இலங்கை மகளிர் அணி களமிறங்கியது. இதில் கேப்டன் ஷமாரி அட்டப்பட்டு இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். இன்னும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஹாசினி பெரேரா மற்றும் இமிஷா துலானி விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. ஹாசினி பெரேரா 42 பந்துகளில் 65 ரன்களும், துலானி 39 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எனினும் மற்ற வீராங்கனைகள் யாரும் துணை நிற்காததால் இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் ஜெமிமா, ஸ்மிருதி மந்தானா உள்ளிட்ட ஸ்டார் வீராங்கனைகள் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications