ஐசிசி டி20 மகளிர் உலககோப்பை.. 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் சாதிக்குமா ஹர்மன் படை
மும்பை: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை, பிசிசிஐ மே 2 அன்று அறிவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில், உலகக் கோப்பைக்கு முன்னதாக, அதே வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்று இருதரப்பு டி20 போட்டிகளிலும் பங்கேற்பர்.
WPL 2026 தொடரில் 17 விக்கெட்டுகள் மற்றும் ஒரு ஹாட்ரிக் எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் வீராங்கனை நந்தினி ஷர்மா, முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். சோஃபி டிவைனுடன் இணைந்து அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில் ஒருவராகத் திகழும் 24 வயதான நந்தினி, உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான பந்துவீச்சை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி தென்னாப்பிரிக்கா டி20 தொடரைத் தவறவிட்ட யாஸ்திகா பாட்டியா ஏசிஎல் அறுவை சிகிச்சையில் இருந்து குணம் அடைந்துள்ளார். 89 டி20 போட்டிகள் அனுபவம் கொண்ட ராதா யாதவி ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். அதேநேரம், அமன்ஜோத் கவுர் முதுகு காயம் காரணமாகவும், மற்றும் காஷ்வி கெளதம் முழங்கால் காயம் காரணமாகவும், உலகக் கோப்பை அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதே இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மே 28, 30 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகளில் மோதும். அதைத் தொடர்ந்து, ஜூலை 10 ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கும்.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பயணம், பாகிஸ்தானுக்கு எதிராக ஜூன் 14, ஞாயிற்றுக்கிழமை பிர்மிங்காமில் தொடங்குகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி பின்னர் ஜூன் 17 அன்று லீட்ஸ் மைதானத்தில் நெதர்லாந்துடனும், ஜூன் 21 அன்று மான்செஸ்டரில் தென் ஆப்பிரிக்காவுடனும் மோதும். குரூப் சுற்றின் இறுதி இரண்டு போட்டிகளில் முறையே ஜூன் 25 அன்று மான்செஸ்டரில் பங்களாதேஷுடனும், ஜூன் 28 அன்று லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவுடனும் இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை செய்கிறது.
2025 இல் தங்களது முதல் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி, இம்முறை தங்களது முதல் டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.டி20 உலகக் கோப்பை மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணைக் கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், பாரதி ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரண், நந்தினி ஷர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கெளட், ஸ்ரேயாங்கா பாட்டில், ராதா யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், பிரத்திகா ராவல், தீப்தி ஷர்மா, ஸ்ரீ சரண், நந்தினி ஷர்மா, ஹர்லீன் தியோல், ரேணுகா தாக்கூர், கிராந்தி கெளட், சாயாலி சட்காரே, ஸ்னே ராணா.


Click it and Unblock the Notifications

