மும்பை : இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று தோல்வி அடைந்தது. அடுத்து ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 283 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. இதுவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய மகளிர் அணி ஒருநாள் போட்டிகளில் எடுத்த பெரிய ஸ்கோர் ஆகும்.

இதுவரை ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் தொடரில் இந்திய அணி வீழ்த்தியதே இல்லை. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோராக 282 ரன்கள் அடித்ததன் மூலம் வெற்றியுடன் ஒருநாள் தொடரை துவக்கலாம் என இந்திய மகளிர் ஆணி கருதியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் யாஸ்திகா பாட்டியா 49, ஜெமிமா ரோட்ரிகஸ் 82, பூஜா வஸ்திரகர் 62 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 289 ரன்கள் வெற்றி இலக்கு மட்டுமே அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கு என்பதால் இந்திய அணி நம்பிக்கையுடன் இருந்தது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆலிசா ஹீலி மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்திய அணி உற்சாகத்துடன் இருந்தது. ஆனால், அதன் பின் விக்கெட்கள் எளிதாக கிடைக்கவில்லை. எல்லிஸ் பெரி 75, போபே லிட்ச்பீல்டு 78, பெத் மூனி 42, தஹிலா மெக்கிராத் 68 ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இது வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இத்துடன் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.