மும்பை : சர்வதேச மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நான்கு நாள் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

தஹிலா மெக்ராத் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுக்க தொடக்க வீராங்கனை பெத் மூனி 40 ரன்கள் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்திய வீராங்கனை பூஜா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து இந்திய மகளிர் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. இதில் செபாலி வர்மா 40 ரன்கள் ரிச்சா கோஸ் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 74 ரன்கள் எடுக்க நடு வரிசையில் விளையாடி அசத்திய ஜெமிமா ரோட்ரிகியூஸ் 73 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அவுட் ஆகி வெளியேறினார். எனினும் தீப்தி சர்மா மற்றும் பூஜா கீழ் வரிசையில் களமிறங்கி அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி எட்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள் குவித்தது.
இதனை அடுத்து 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் நல்ல முறையில் பேட்டிங் செய்தாலும் யாரும் பெரிய ஸ்கோர் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி களம் இறங்கியது. இதில் ஷபாலி வர்மா 4 ரன்கள் ஆட்டம் இழக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் விளாசி இந்திய மகளிர் அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 18.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இது மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற முதல் வெற்றியாகும்.