மும்பை : இந்திய மகளிர் அணியின் ஆல் - ரவுண்டர் தீப்தி சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 41 வருட ஆசிய மற்றும் இந்திய அளவிலான சிறந்த பந்துவீச்சு ரெக்கார்டை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
அத்துடன் ஆடவர் அணியுடன் போட்டி போட்டு, ஜாம்பவான்களான கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றார் தீப்தி சர்மா.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.

இந்தப் போட்டியில் தீப்தி சர்மா ஆறாவது பந்துவீச்சாளராகவே பயன்படுத்தப்பட்டார். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டரை மொத்தமாக சரித்து மிரட்டினார். 10 ஓவர்கள் பந்து வீசி 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இந்திய மகளிர் அணி பந்துவீச்சாளர்கள் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த 1982இல் சாண்ட்ரா பிரகன்ஸா 10 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அந்த 41 வருட சாதனையை முறியடித்துள்ள தீப்தி சர்மா தற்போது ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் ஆசிய அளவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்து இருக்கிறார் தீப்தி சர்மா.
மேலும், ஆடவர் கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை சேர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் எட்டாவது நபராக இடம் பெற்று இருக்கிறார். முன்னதாக கபில் தேவ், ரவி சாஸ்திரி, அஜித் அகர்கர், சச்சின் டெண்டுல்கர், முரளி கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இதே சாதனையை செய்து இருந்தனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் சுமாராகவே இருந்தது. மொத்தம் ஏழு கேட்ச்களை நழுவ விட்டு பெரும் ஏமாற்றம் அளித்தாலும், ஆஸ்திரேலிய அணியை 50 ஓவர்களில் 258 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டது ஆறுதலாக அமைந்தது. எனினும், சேஸிங்கில் கடைசி நேரம் வரை வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்திய அணி பதற்றம் அடைந்து விக்கெட்களை பறிகொடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 0 - 2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.