மும்பை : இந்திய மகளிர் அணியின் ஆல் - ரவுண்டர் ஸ்னே ரானா புலியாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி அவர் பிடித்த கேட்ச்சை பார்த்து மிரண்டு போனார். ஆட்டத்தின் 3வது பந்திலேயே ஸ்னே ரானா பிடித்த கேட்ச்சால் டக் அவுட் ஆனார் அலிசா ஹீலி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் தான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை டெஸ்ட் போட்டிகளில் வென்று வரலாறு படைத்து இருந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று உள்ளது.

இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டியா 49, ஜெமிமா ரோட்ரிகஸ் 82 ரன்கள் சேர்த்தனர். மற்ற டாப் ஆர்டர், மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆடிய யாரும் சரியாக ரன் குவிக்கவில்லை.
ஒன்பதாம் வரிசையில் இறங்கிய பூஜா வஸ்திரகர் 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்து மிரட்டினார். இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்தது.
அந்த அணியின் கேப்டன் ஆலிசா ஹீலி துவக்கம் அளித்தார். முதல் ஓவரை இந்திய அணியின் ரேணுகா சிங் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஆலிசா ஹீலி தேர்டு மேன் திசையில் அடித்தார். அப்போது பாதி தூரத்தில் ஸ்னே ரானா ஓடி வந்து புலியாக பாய்ந்து பந்தை கேட்ச் பிடித்தார்.
அது மிகவும் கடினமான கேட்ச். ஸ்னே ரானா கேட்ச் பிடிக்காமல் போயிருந்தால் கூட யாரும் அது நழுவிப் போனதாக கூறி இருக்க முடியாது. ஆனால், அசாத்தியமான முயற்சியால் பாய்ந்து வந்து கேட்ச் பிடித்தார் ஸ்னே ரானா. அதை நம்ப முடியாத ஆலிசா ஹீலி சிறிது நேரம் நின்று இருந்தார். அதன் பின்னரே தான் அவுட் ஆனதை உணர்ந்து வெளியேறினார்.