IND W vs AUS W: 25 பந்துகளில் ஹர்மன்பிரீத் அரைசதம்.. கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்.. நேரில் வந்த கோலி
லண்டன்: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முக்கிய ஆட்டத்தில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடி அரைசதத்துடன் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி அசத்தினார்.
முன்னதாக, தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆடுகளத்தின் தன்மையை கணித்து விளையாடிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஜோடி முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நிலைத்து நின்று ஆடத் தொடங்கிய மந்தனா, கிம் கார்த் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை உயர்த்தினார். மறுமுனையில் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஆஷ்லே கார்ட்னர் வீசிய நான்காவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அதிரடிக்கு மாறினார். பவர்பிளேயின் கடைசி ஓவரிலும் பவுண்டரி விளாசப்பட்டதால், இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது.
பவர்பிளே முடிந்த பின்னரும் இந்த ஜோடி ரன் குவிக்கும் வேகத்தைக் குறைக்கவில்லை. கார்ட்னர் வீசிய 9-வது ஓவரில் ஷஃபாலி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடிக்க, இந்தியாவின் தொடக்க ஜோடி 60 ரன்களைக் கடந்தது. இறுதியில், 10-வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பந்துவீச்சில் ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்தார். 26 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்திருந்த அவரது ஆட்டத்தால் இந்தியாவுக்கு 66 ரன்களில் வலுவான தொடக்க பார்ட்னர்ஷிப் கிடைத்தது.
ஒருபுறம் மந்தனா நிதானமாக விளையாட, மறுபுறம் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கினார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் ஸ்மிருதி மந்தனா ரன் அவுட் ஆனார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ஜோடி இணைந்து இன்னிங்ஸை சீரமைத்தனர். இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் எடுத்து ரன் ரேட்டை உயர்த்தினர். இதனால் 14-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது.
ஆடுகளத்தில் நிலைத்து நின்ற பிறகு ஹர்மன்பிரீத் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். அனபெல் சதர்லேண்ட் வீசிய 15-வது ஓவரில் பவுண்டரி அடித்த அவர், தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் ஜெமிமாவும் அதிரடியாக விளையாடி, 19-வது ஓவரில் சதர்லேண்ட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 150 ரன்களைக் கடந்தது. ஜெமிமா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தவறவிட்ட நிலையில், அவர் 34 ரன்களில் (28 பந்துகள், 1 பவுண்டரி, 1 சிக்ஸர்) ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
கடைசி ஓவர் முழுவதும் ஹர்மன்பிரீத் கவுரின் அதிரடியாக அமைந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்த அவர், அடுத்தடுத்து மூன்று ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். பின்னர் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் குவித்தார்.
ஹர்மன்பிரீத்தின் கடைசி நேர அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தற்காத்துக் கொள்ள இது ஒரு சிறந்த ஸ்கோராகும். இந்தப் போட்டியை விராட் கோலி பார்வையாளர்களுடன் நேரில் கண்டு களித்து, வீராங்கனைகளுக்கு உற்சாகத்தை தந்தார்.


Click it and Unblock the Notifications

