ராஜ்கோட் : அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் அடித்து அசத்தியிருக்கிறது. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஆடவர் அணியை விட தற்போது மகளிர் அணி தான் அதிக ஸ்கோரை நிர்ணித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல் மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் அயர்லாந்து வீராங்கனைகள் தடுமாறினர். குறிப்பாக ஸ்மிருதி மந்தானா, அயர்லாந்து பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்தார். 39 பந்துகளில் மந்தானா 50 ரன்கள் விளாசினார்.
இதில் ஐந்து பௌண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் நிதானமாக விளையாடிய பிராத்திகா ராவல் 52 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
எனினும் ஸ்மிருதி மந்தானா தொடர்ந்து அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 70 பந்துகளில் எல்லாம் ஸ்மிருதி மந்தானா சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தானா படைத்தார்.
இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 80 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து மந்தனா ஆட்டமிழந்தார். இதில் 12 பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். மறுமணையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பிரதிகா ராவல் 129 பந்துகளில் 154 ரன்கள் எடுத்தார். இதில் 20 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் மூலம் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 233 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது.
இறுதியில் ரிச்சா கோஸ் 59 ரன்களும், தேஜால் 28 ரன்களும், ஹர்லின் டியோல் 15 ரன்கள் எடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. இதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்களுடைய அதிகபட்ச அணி ஸ்கோரை நிர்ணயித்திருக்கிறது. ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டையும் பொறுத்தவரை இது நான்காவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதனையடுத்து 436 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட அயர்லாந்து மகளிர் அணியினர் ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க தடுமாறினர். கேப்டன் கேபி லீவிஸ் 1 ரன்னிலும், கிறிஸ்டினப டக் அவுட்டாகியும், ஒர்லா 36 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை சாரா ஃபோப்ஸ் 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து மகளிர் அணி 131 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு இது அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.