விசாகப்பட்டினம்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இன்று களமிறங்குகிறது. ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துகிறது.
ஒருநாள் போட்டிக்கான உலககோப்பையை வென்ற பிறகு இந்திய வீராங்கனைகள் முதல் முறையாக களத்திற்கு திரும்புவதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ள நிலையில், டாஸ் மாலை 6:30 மணிக்கு நடைபெறும்.

இந்தியா, இலங்கை முதல் டி20 போட்டியைஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலையாகக் காணலாம். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்திலும் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
டி20 போட்டியில் கடைசியாக இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி தன் முக்கிய வீராங்கனைகளை தக்கவைத்திருந்தாலும், சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜி. கமலினி மற்றும் 19 வயது இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயத்தால் யாஸ்டிகா பாட்டியா இத்தொடரில் பங்கேற்கவில்லை.சயாலி சத்கரே, ராதா யாதவ், சுச்சி உபாத்யாய் ஆகியோரும் அணியில் இல்லை. அதேநேரம், ரேணுகா தாக்கூர் மீண்டும் டி20 அணிக்கு அழைக்கப்பட்டு, இந்திய அணியை பலப்படுத்தியுள்ளார்.
இலங்கை அணியை மூத்த வீராங்கனை சாமரி அட்டபட்டு வழிநடத்தவுள்ளார். ஹர்ஷிதா சமரவிக்ரமா துணை கேப்டனாக செயல்படுகிறார். நிமேஷா மதுஷானிக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷஷினி கிம்ஹானி மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய மகளிர் அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, சினே ராணா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஷஃபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிராந்தி கௌட், ரேணுகா சிங் தாக்கூர், ரிச்சா கோஷ், ஜி. கமலினி, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி ஷர்மா.
இலங்கை மகளிர் அணி விவரம்: சாமரி அதபத்து (கேப்டன்), ஹசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷிகா டி சில்வா, கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, கவுஷினி நுத்யாங்கனா, மல்ஷா ஷெஹானி, இனோகா ரணவீரா, ஷஷினி கிம்ஹானி, நிமேஷா மதுஷானி, காவியா கவிந்தி, ரஷ்மிகா செவ்வண்டி, மல்கி மதாரா.