வதோதரா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா பந்துவீச்சில் உலக சாதனை படைத்து இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
தீப்தி சர்மா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஒரே போட்டியில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன் 2016 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் தீப்தி சர்மா. அதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகவும் உள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 31 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.
மேலும், உலக அளவில் இந்த சாதனையை செய்த இரண்டாவது பந்து வீச்சாளர் ஆகவும் சாதித்து இருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் சேன் லூயிஸ் இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அந்த சாதனையை சமன் செய்து இருக்கிறார் தீப்தி சர்மா.
இந்திய அளவில் ஒரே போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் ஆகவும் தீப்தி சர்மா இருக்கிறார். இதற்கு முன் ஜூலன் கோஸ்சுவாமி மற்றும் மமதா மாபென் ஆகியோர் தலா ஒரு முறை 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களது சாதனையை முந்தி இருக்கும் தீப்தி சர்மா இரண்டு முறை அதை செய்து இருக்கிறார்.
மேலும், இந்திய அளவில் இந்த சாதனையை செய்த ஒரே வீராங்கனையாகவும் இருக்கிறார். இந்த போட்டியில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கை கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 48 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் தீப்தி சர்மா.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தீப்தி சர்மா 6 விக்கெட், ரேணுகா சிங் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன் பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிகஸ் 29 ரன்களையும் எடுத்தனர்.
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் அபாரமாக ஆடினர். தீப்தி சர்மா 39 ரன்களையும், ரிச்சா கோஷ் 23 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 29 வது ஓவரில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.